கர்நாடகத்தில் பஸ் கட்டணம் 18 சதவீதம் உயர்வு : போக்குவரத்து துறை மந்திரி டி.சி.தம்மண்ணா தகவல்


கர்நாடகத்தில் பஸ் கட்டணம் 18 சதவீதம் உயர்வு : போக்குவரத்து துறை மந்திரி டி.சி.தம்மண்ணா தகவல்
x
தினத்தந்தி 28 Dec 2018 5:37 AM IST (Updated: 28 Dec 2018 5:37 AM IST)
t-max-icont-min-icon

போக்குவரத்து கழகங்கள் ரூ.687 கோடி நஷ்டத்தில் இயங்குவதாகவும், எனவே கர்நாடகத்தில் பஸ் கட்டணம் 18 சதவீதம் உயர்த்த முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும் போக்குவரத்து துறை மந்திரி டி.சி.தம்மண்ணா கூறினார்.

பெங்களூரு,

பெட்ரோலிய பொருட்களின் விலை உயர்வு காரணமாக கர்நாடகத்தில் அரசு போக்குவரத்து கழக பஸ்களில் கட்டணம் உயர்த்த கடந்த சில மாதங்களாக போக்குவரத்துறை பரிசீலித்து வருகிறது. ஆனால் பல்வேறு காரணங்களால் பஸ் கட்டண உயர்வு தள்ளி போய் வந்தது.

இந்த நிலையில் கர்நாடகத்தில் பஸ் கட்டணம் 18 சதவீதம் வரை உயர்த்த கர்நாடக அரசு முடிவு செய்துள்ளதாக மாநில போக்குவரத்து துறை மந்திரி டி.சி.தம்மண்ணா பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

கர்நாடக அரசு போக்குவரத்து கழகங்கள் ரூ.687 கோடி நஷ்டத்தில் இயங்குகின்றன. இதனால் போக்குவரத்து கழகங்களை நடத்த முடியவில்லை. ஊழியர்களுக்கு சம்பளம் உள்பட இதர சலுகைகளையும் வழங்க முடியவில்லை.

பஸ் கட்டணத்தை உயர்த்த கோரி முதல்-மந்திரியிடம் முன்பு கோரிக்கை விடுத்தோம். பல்வேறு காரணங்களால் கட்டணம் உயர்த்தப்படவில்லை. இப்ேபாது பஸ் கட்டணத்தை உயர்த்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. 18 சதவீத பஸ் கட்டணத்தை உயர்த்த முடிவு செய்துள்ளோம். இது தொடர்பாக முதல்-மந்திரியை நாளை (அதாவது இன்று) நேரில் சந்தித்து பேச உள்ளேன். அவரிடம் இதற்கு ஒப்புதல் பெற முயற்சி செய்வேன்.

பெங்களூரு மாநகர போக்குவரத்து கழகத்திற்கு புதிதாக 3,000 பஸ்கள் கொள்முதல் செய்யப்படும்.

இதில் 1,500 பஸ்கள் அரசே கொள்முதல் செய்யும். மீதமுள்ள 1,500 பஸ்கள் ஒப்பந்த அடிப்படையில் பெறப்படும். கர்நாடக அரசு போக்குவரத்து கழகத்திற்கு அதிக எண்ணிக்கையில் புதிய பஸ்களை கொள்முதல் செய்ய வேண்டும் என்ற கோரிக்கை உள்ளது.

போக்குவரத்து கழகங்களில் 271 அதிகாரிகள் நியமனம் செய்யப்படுவார்கள். அதுபோக 376 காலி இடங்கள் உள்ளன. அவற்றையும் படிப்படியாக நிரப்புவோம். தனியார் பஸ்களுக்கும் ஜி.பி.எஸ். கருவிகள் பொருத்தப்படும்.

இதுகுறித்து உயர் அதிகாரிகளுடன் ஆலோசித்து முடிவு எடுப்ேபாம். அதன் பிறகு முதல்-மந்திரியுடன் விவாதித்து இறுதி முடிவுகள் எடுக்கப்படும். சோதனை சாவடிகளில் நடைபெறும் முறைகேடுகளை தடுக்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துள்ளது.

இவ்வாறு மந்திரி டி.சி.தம்மண்ணா கூறினார்.

Next Story