மந்திரி யு.டி.காதர் சென்ற விமானத்தில் திடீர் ‘தீ’ : அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்


மந்திரி யு.டி.காதர் சென்ற விமானத்தில் திடீர் ‘தீ’ : அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்
x
தினத்தந்தி 28 Dec 2018 5:41 AM IST (Updated: 28 Dec 2018 5:41 AM IST)
t-max-icont-min-icon

பெங்களூருவில் இருந்து மங்களூருவுக்கு மந்திரி யு.டி.காதர் சென்ற விமானத்தில் திடீரென தீப்பிடித்துக் கொண்டது. இதில் அவர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.

மங்களூரு,

பெங்களூருவில் இருந்து தட்சிண கன்னடா மாவட்டம் மங்களூருவுக்கு நேற்று காலையில் மந்திரி யு.டி.காதர் புறப்பட்டார். அவர் பெங்களூருவில் உள்ள சர்வதேச விமான நிலையத்தில் இருந்து காலை 7 மணியளவில் தனியார் விமானம் மூலம் மங்களூரு பஜ்பே விமான நிலையத்திற்கு செல்ல இருந்தார். அதன்பேரில் விமானத்தில் மந்திரி யு.டி.காதர் உள்பட 75 பயணிகள் ஏறினர். அதையடுத்து விமானமும் புறப்பட்டு ஓடுபாதையில் சென்று கொண்டிருந்தது.

அந்த சந்தர்ப்பத்தில் விமானத்தில் குளிர் சாதன எந்திரங்கள் பொருத்தப்பட்டிருந்த இடத்தில் இருந்து திடீரென புகை வந்தது. சில நிமிடங்களில் அந்த இடத்தில் தீப்பிடித்துக் கொண்டது. இதனால் விமானத்தில் இருந்த மந்திரி யு.டி.காதர் மற்றும் பயணிகள் அதிர்ச்சியில் கூச்சல் போட்டனர். பின்னர் உடனடியாக விமானத்தை விமானி நிறுத்தினார். மேலும் விமான நிலையத்தில் தயாராக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த தீயணைப்பு வாகனங்கள் விரைந்து சென்று தண்ணீரை பீய்ச்சி அடித்து விமானத்தில் பிடித்திருந்த தீயை அணைத்தது. இதையடுத்து விமானத்தில் இருந்து மந்திரி யு.டி.காதர் உள்பட பயணிகள் அனைவரும் பத்திரமாக மீட்கப்பட்டனர்.

அதையடுத்து காலை 8.30 மணியளவில் பெங்களூருவில் இருந்து மாற்று விமானம் மூலம் மந்திரி யு.டி.காதர் மற்றும் 70 பயணிகள் மங்களூருவுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். 4 பயணிகள் தங்களுடைய பயணத்தை ரத்து செய்துவிட்டனர். இந்த சம்பவத்தால் பெங்களூரு விமான நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டது. மின்கசிவு காரணமாக விமானத்தில் தீப்பிடித்துக் கொண்டதாக கூறப்படுகிறது. இதுபற்றி விமான நிலைய அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

இச்சம்பவம் குறித்து மங்களூருவில் மந்திரி யு.டி.காதர் நிருபர்களிடம் கூறினார். அப்போதுதான் இச்சம்பவம் வெளிச்சத்திற்கு வந்தது. இதுபற்றி மந்திரி யு.டி. காதர் கூறுகையில், ‘‘துரிதமாக செயல்பட்டு விமானத்தில் பிடித்திருந்த தீயை அணைத்ததால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. இல்லை என்றால் நான் உள்பட பயணிகள் அனைவரும் பாதிக்கப்பட்டிருப்போம்’’ என்று மந்திரி யு.டி.காதர் அதிர்ச்சியுடன் கூறினார். மேலும், ‘‘நான் உள்பட பயணிகள் அனைவரும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பி உள்ளோம்’’ என்றும் அவர் தெரிவித்தார்.

Next Story