காங்கேயம் அருகே கீழ்பவானி வாய்க்காலில் மூழ்கி தொழிலாளி சாவு


காங்கேயம் அருகே கீழ்பவானி வாய்க்காலில் மூழ்கி தொழிலாளி சாவு
x
தினத்தந்தி 28 Dec 2018 4:15 AM IST (Updated: 28 Dec 2018 5:43 AM IST)
t-max-icont-min-icon

காங்கேயம் அருகே கீழ் பவானி வாய்க்காலில் மூழ்கி தொழிலாளி பலியானார்.

காங்கேயம்,

திருப்பூர் மாவட்டம் காங்கேயம் அருகே உள்ள திட்டுப்பாயை சேர்ந்தவர் அருள் குமார் (வயது 32). விவசாய கூலித்தொழிலாளி.

இவர் கடந்த 25-ந் தேதி காலையில் வழக்கம்போல் வேலைக்கு சென்றார். அதன்பின்னர் அவரை காணவில்லை. வழக்கமாக காலை 10.30 மணிக்கு வீட்டிற்கு சாப்பிட வரும் கணவரை காணவில்லை என்று அவர் வேலை செய்யும் பகுதிக்கு அவருடைய மனைவி சுதா, கீழ் பவானி வாய்க்கால் கரை வழியாக தேடி சென்றுள்ளார். அப்போது வாய்க்கால் கரையோரம், அருள்குமார் உடுத்து இருந்த வேட்டி மற்றும் சட்டை மற்றும் காலணி இருந்துள்ளது.

இதனால் சந்தேகமடைந்த சுதா அக்கம்பக்கத்தில் இருந்தவர்களிடம் விவரத்தை சொல்லி உள்ளார். பின்னர் அனைவரும் சேர்ந்து அருள் குமாரை தேடினர். ஆனாலும் அவரை கண்டு பிடிக்க முடியவில்லை.

இந்தநிலையில் நேற்று பழையகோட்டை ஊராட்சி சித்தம்பலம் என்ற இடத்தில் உள்ள வாய்க்கால் பாலத்தின் அடியில் அருள்குமார் பிணம் மிதப்பதாக கிராம நிர்வாக அலுவலர் குமார் காங்கேயம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். இதை தொடர்ந்து போலீசார் மற்றும் காங்கேயம் தீயணைப்பு நிலைய அலுவலர் மதுரை வீரன் தலைமையில் வீரர்கள் சென்று அருள்குமாரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக காங்கேயம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

அதாவது அருள்குமார் தினமும் வீட்டிற்கு சாப்பிட செல்லும் போது கீழ்பவானி வாய்க்காலில் குளித்து விட்டு செல்வதை வழக்கமாக கொண்டிருந்தார். அதன்படி சம்பவத்தன்று வீட்டிற்கு சென்ற அருள்குமார், கீழ்பவானி வாய்க்காலில் தண்ணீர் செல்வதை பார்த்து, வேட்டி, சட்டை மற்றும் காலணியை கழற்றி வைத்து விட்டு குளித்துள்ளார்.

அப்போது தண்ணீரில் அடித்து செல்லப்பட்ட அருள்குமார், நீரில் மூழ்கி இறந்து இருக்கலாம் என போலீசார் தெரிவித்தனர்.

இது குறித்து காங்கேயம் போலீஸ் இன்ஸ்பெக்டர் முருகேசன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். 

Next Story