முதலாளிகளுக்கான திட்டங்களையே மத்திய அரசு செயல்படுத்துகிறது காங்கிரஸ் கட்சியின் தேசிய செயலாளர் சஞ்சய்தத் பேச்சு
முதலாளிகளுக்கான திட்டங்களை மட்டுமே மத்திய அரசு செயல்படுத்தி வருவதாக காங்கிரஸ் கட்சியின் தேசிய செயலாளர் சஞ்சய் தத் கூறினார்.
திருப்பூர்,
காங்கிரஸ் கட்சியின் திருப்பூர் மாநகர் மாவட்ட 3-வது மண்டல வாக்குசாவடி முகவர்கள் ஆய்வு கூட்டம் திருப்பூர் ராமையாகாலனியில் நேற்று நடந்தது.
கூட்டத்திற்கு மாநகர் மாவட்ட தலைவர் கிருஷ்ணன் தலைமை தாங்கினார். ஒருங்கிணைப்பாளர் சுப்பிரமணி முன்னிலை வகித்தார். அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் தேசிய செயலாளர் சஞ்சய்தத், மாநில பொதுசெயலாளர் அருள் பெத்தையா ஆகியோர் கலந்து கொண்டு பேசினார்கள்.
கூட்டத்தில் கட்சியின் தேசிய செயலாளர் சஞ்சய்தத் பேசும் போது கூறியதாவது:-
சுதந்திர போராட்டத்தில் முக்கிய பங்கு வகித்த திருப்பூர் குமரன் வாழ்ந்த பூமி இது. உலக அளவில் திருப்பூர் மிக முக்கியத்துவம் வாய்ந்த நகரமாக உள்ளது. இதற்கு காரணம் இங்கு உள்ள தொழிலாளர்கள் தான். இந்தியாவில் காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல்காந்தி மட்டுமே அனைத்து தரப்பு மக்களை பற்றி கவலைப்படுபவராக இருந்து வருகிறார். காங்கிரஸ் கட்சி அடுத்த தேர்தலை சந்திப்பதற்கு தயாராகி கொண்டு இருக்கிறது. உங்கள் சந்ததிகளின் எதிர்காலம் உங்கள் கையில் தான் உள்ளது.
பா.ஜனதா கட்சி ஆட்சிக்கு வரும்போது, கருப்பு பணம் மீட்கப்படும், ஒவ்வொருவருடைய வங்கி கணக்கிலும் குறிப்பிட்ட அளவு பணம் வைப்புதொகையாக வைக்கப்படும் என்பது போன்ற ஏராளமான பொய் வாக்குறுதிகளை முன்வைத்து ஆட்சியை பிடித்தார். ஆனால் தற்போது பெட்ரோல், டீசல் உள்ளிட்ட அனைத்து பொருட்களின் விலையும் ஏற்றம் அடைந்துள்ளது. தமிழக அரசும் தொடர்ந்து மக்கள் நலனை கருத்தில் கொள்ளாமல் பணத்தை மட்டும் குறிக்கோளாக கொண்டு செயல்பட்டு வருகிறது.
ஆட்சிக்கு முக்கியத்துவம் கொடுக்கவில்லை. கஜா புயல் பாதிப்பை வந்து பார்ப்பதற்கு பிரதமருக்கு நேரம் இல்லை என்கிறார்கள். ஆனால் பெரிய தொழிலதிபர்களின் வீடுகளில் நடைபெறும் விருந்து நிகழ்ச்சிகளில் பங்கேற்க அவருக்கு எப்படி நேரம் கிடைக்கிறது. பிரதமர் மோடி, தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி மற்றும் துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோரை தனது கட்டுப்பாட்டுக்குள் வைத்து இயக்கி கொண்டிருக்கிறார்.
காங்கிரஸ் கட்சி ஆட்சியில் இருக்கும் போது அடித்தட்டு மக்களுக்கான திட்டங்கள் நிறைவேற்றப்பட்டு வந்தது. ஆனால் இந்த ஆட்சியில் முதலாளிகளுக்கான திட்டங்கள் மட்டுமே செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதனால் விரைவில் இந்த ஆட்சியை மக்கள் அகற்றுவார்கள். விரைவில் ராகுல்காந்தி தலைமையிலான காங்கிரஸ் கட்சி ஆட்சியை அமைக்கும். இதற்கு அனைவரும் ஒத்துழைக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
இதைதொடர்ந்து ராமையாகாலனி பகுதியில் கட்சி கொடி ஏற்றப்பட்டது. பின்னர் மத்திய அரசின் வீழ்ச்சி நிலை குறித்தும், காங்கிரஸ் கட்சியின் சாதனைகள் குறித்த தகவல்கள் அடங்கிய துண்டுபிரசுரங்களை பொதுமக்களுக்கு வழங்கினார். இதில், மாநில சிறுபான்மை துணை தலைவர் சித்திக், நிர்வாகிகள் ஈஸ்வரன், கோபால், வேலுசாமி, தங்கராஜ், சிறுபான்மை பிரிவு செயலாளர் முன்னா மற்றும் பொதுசெயலாளர்கள், வட்டதலைவர்கள், மண்டல தலைவர்கள், பூத்கமிட்டி தலைவர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story