கோவில்பட்டி சிறை முன்பு போலீஸ்காரர் விஷம் குடித்ததால் பரபரப்பு ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை


கோவில்பட்டி சிறை முன்பு போலீஸ்காரர் விஷம் குடித்ததால் பரபரப்பு ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை
x
தினத்தந்தி 28 Dec 2018 2:51 PM IST (Updated: 28 Dec 2018 2:51 PM IST)
t-max-icont-min-icon

கோவில்பட்டி சிறை முன்பு போலீஸ்காரர் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றார். அவருக்கு ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.

கோவில்பட்டி, 

கோவில்பட்டி சிறை முன்பு போலீஸ்காரர் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றார். அவருக்கு ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.

போலீஸ்காரர்

தூத்துக்குடி மாவட்டம் கடம்பூர் மேல தெருவைச் சேர்ந்தவர் ஆறுமுகம். இவருடைய மகன் கருப்பசாமி (வயது 30). இவர் கோவில்பட்டி கிளை சிறையில் 2-ம் நிலை போலீஸ்காரராக பணியாற்றி வருகிறார். இவர் நேற்று காலையில் அலுவலக பணிக்காக, பாளையங்கோட்டை மத்திய சிறைக்கு சென்றார். பின்னர் அவர் மாலையில் கோவில்பட்டி சிறைக்கு திரும்பி வந்தார்.

பின்னர் இரவில் சிறையில் பணி முடிந்ததும், கருப்பசாமி தனது வீட்டுக்கு புறப்பட்டார். அப்போது அவர் திடீரென்று விஷம் குடித்து விட்டு, சிறை முன்பாக மயங்கி விழுந்தார். உடனே கருப்பசாமியை போலீசார் மீட்டு கோவில்பட்டி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.

போலீசார் விசாரணை

இதுகுறித்து கோவில்பட்டி மேற்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) ராமகிருஷ்ணன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். பணியில் ஏற்பட்ட மனஅழுத்தத்தில் கருப்பசாமி விஷம் குடித்தாரா? அவருக்கு உயர் அதிகாரிகள் யாரேனும் பணி நெருக்கடி அளித்தனரா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

தற்கொலைக்கு முயன்ற கருப்பசாமிக்கு கவிதா (27) என்ற மனைவியும், மதுராகவன் (1½) என்ற மகனும் உள்ளனர். கோவில்பட்டி சிறை முன்பு போலீஸ்காரர் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Next Story