கரிவலம்வந்தநல்லூர் அருகே மோட்டார் சைக்கிள்கள் மோதல்; தொழிலாளி சாவு 3 பேர் படுகாயம்
கரிவலம்வந்தநல்லூர் அருகே மோட்டார்சைக்கிள்கள் மோதிக் கொண்ட விபத்தில் தொழிலாளி பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் 3 பேர் படுகாயம் அடைந்தனர்.
சங்கரன்கோவில்,
கரிவலம்வந்தநல்லூர் அருகே மோட்டார்சைக்கிள்கள் மோதிக் கொண்ட விபத்தில் தொழிலாளி பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் 3 பேர் படுகாயம் அடைந்தனர்.
தொழிலாளிநெல்லை மாவட்டம் சங்கரன்கோவில் அருகே உள்ள பெரும்பத்தூரை சேர்ந்தவர் மகாலிங்கம் (வயது 38). இவர் விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே முறம்புவில் உள்ள ஒரு தனியார் ஆலையில் சுமை தூக்கும் தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார். நேற்று காலை மகாலிங்கம் தனது மோட்டார் சைக்கிளில் முறம்புவுக்கு சென்று கொண்டிருந்தார்.
கரிவலம்வந்தநல்லூரை அடுத்த பருவக்குடி அருகே சென்றபோது, ராஜபாளையம் சர்ச் தெருவை சேர்ந்த பெயிண்டர்கள் தாவீது (28), சில்வர் (38), ஜான்ஜெயமணி (53) ஆகிய 3 பேரும், எதிரே மற்றொரு மோட்டார் சைக்கிளில் கரிவலம்வந்தநல்லூர் நோக்கி வந்து கொண்டிருந்தனர்.
பரிதாப சாவுஅப்போது எதிர்பாராதவிதமாக 2 மோட்டார் சைக்கிள்களும் நேருக்கு நேர் மோதிக்கொண்டன. இதில் மகாலிங்கம் உள்பட 4 பேரும் தூக்கி வீசப்பட்டு பலத்த காயம் அடைந்து உயிருக்கு போராடினர். இதையடுத்து அவர்களை அக்கம்பக்கத்தினர் மீட்டு சங்கரன்கோவில் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
அங்கு அவர்களுக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி மகாலிங்கம் பரிதாபமாக உயிரிழந்தார். மற்ற 3 பேரும் மேல் சிகிச்சைக்காக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். இதுகுறித்து கரிவலம்வந்தநல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.