வாணியம்பாடி அருகே பதுங்கல் மயக்க ஊசி போட்டு சிறுத்தையை பிடிக்க நடவடிக்கை


வாணியம்பாடி அருகே பதுங்கல் மயக்க ஊசி போட்டு சிறுத்தையை பிடிக்க நடவடிக்கை
x
தினத்தந்தி 29 Dec 2018 4:30 AM IST (Updated: 28 Dec 2018 8:09 PM IST)
t-max-icont-min-icon

வாணியம்பாடி அருகே பதுங்கி உள்ள சிறுத்தையை மயக்க ஊசி போட்டு பிடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

வாணியம்பாடி, 

வாணியம்பாடியை அடுத்த சிக்கணாங்குப்பம் அருகே நாகலேரி வட்டம் பகுதியில் உள்ள கரும்புத்தோட்டத்தில் சிறுத்தை புகுந்தது. நேற்றுமுன்தினம் காலை அலமேலு என்ற பெண் மாட்டுக்கு தீவனம் எடுக்க கரும்புத்தோட்டத்துக்கு சென்றார். அப்போது சிறுத்தை சத்தமிட்டது. இதனால் திடுக்கிட்ட அவர் ஊருக்குள் சென்று பொதுமக்களுக்கு தகவல் தெரிவித்தார்.

பொதுமக்கள் கரும்புத்தோட்டத்துக்கு சென்றனர். பதுங்கி இருந்த சிறுத்தை திடீரென பாய்ந்து 3 பேரை தாக்கியது. பொதுமக்கள் அவர்களை மீட்டு சிகிச்சைக்காக வாணியம்பாடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

சிறுத்தை தாக்கிய சம்பவம் அப்பகுதியில் காட்டுத்தீ போல் பரவியது. ஏராளமானோர் அப்பகுதியில் திரண்டனர். சிலர் சிறுத்தை இருந்த பகுதியை நோக்கி கல்வீசினர்.

இதனால் கோபம் கொண்ட சிறுத்தை மக்கள் கூடி இருந்த கூட்டத்தில் புகுந்து தாக்க ஆரம்பித்தது. அப்போது பொதுமக்கள் உயிர் தப்பினால் போதும் என கருதி நாலாபுறமும் சிதறி ஓடினர். இருப்பினும் சிறுத்தை அவர்களை துரத்தி, தாக்கியதில் மேலும் 3 பேர் படுகாயம் அடைந்தனர். இவர்களும் சிகிச்சைக்காக வாணியம்பாடி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். பொதுமக்கள் கலைந்து ஓடியதால் சிறுத்தை மறுபடியும் நாகலேரி முட்புதரில் புகுந்தது.

இதுகுறித்து தகவல் அறிந்ததும் வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். சிறுத்தையை பிடிக்க 3 கூண்டுகள் கொண்டு வரப்பட்டது. அதில் மாட்டு இறைச்சி, கோழி, நாய் ஆகியவற்றை அடைத்து ஏரி பகுதியில் வைக்கப்பட்டுள்ளது. சிறுத்தையை மயக்க மருந்து செலுத்தி பிடிக்க வண்டலூர், ஓசூரில் இருந்து மயக்க மருந்து நிபுணர்கள் வரவழைக்கப்பட்டனர்.

வனத்துறையினர் மயக்க ஊசியுடன் இரவு முழுவதும் சிறுத்தையை தேடினர். ஆனால் சிறுத்தை சிக்கவில்லை. நேற்று காலை கரும்புத்தோட்டம், முட்புதர்களில் சிறுத்தையை தேடினர். அங்கு சிறுத்தை இல்லை. அங்கிருந்து 3 கிலோ மீட்டர் தொலைவில் அடர்ந்த வனப்பகுதி உள்ளது. சிறுத்தை காட்டுக்குள் சென்றிருக்க வாய்ப்புள்ளது. அதனை பிடிக்க தொடர்ந்து வனத்துறையினர் முகாமிட்டுள்ளனர்.


Next Story