வாணியம்பாடி அருகே மேலும் ஒரு சிறுத்தை ஊருக்குள் புகுந்தது பொதுமக்கள் பீதி
வாணியம்பாடி அருகே மேலும் ஒரு சிறுத்தை ஊருக்குள் புகுந்ததால் பொதுமக்கள் பீதி அடைந்துள்ளனர்.
வாணியம்பாடி,
வேலூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே உள்ள தமிழக – ஆந்திர வனப்பகுதியையொட்டிய அலசந்தாபுரம் சிமுக்கம்பட்டுவை சேர்ந்தவர் சேகர், விவசாயி. இவர் தனக்கு சொந்தமான 20 ஆடுகளை அவரது நிலத்தின் அருகில் பட்டியில் அடைத்து வைத்திருந்தார். நேற்று முன்தினம் காலை சேகர், பட்டியை பார்த்தபோது அங்கிருந்த 11 ஆடுகள் இறந்து கிடந்தன. மீதமுள்ள ஆடுகள் கழுத்து, வயிறு போன்ற இடங்களில் படுகாயம் ஏற்பட்டு உயிருக்கு போராடிய நிலையில் இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
மேலும் அங்கு சிறுத்தையின் கால் தடம் பதிந்திருந்தது. இதுகுறித்து வனத்துறைக்கு தகவல் தெரிவித்தார். இதனையடுத்து வனத்துறை மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்டனர்.
கால்நடைத்துறை டாக்டர்கள் சம்பவ இடத்திற்கு வந்து இறந்த ஆடுகள் மற்றும் படுகாயமடைந்த நிலையில் இருந்த ஆடுகளை பரிசோதனை செய்தனர். அதில் ஆடுகளை சிறுத்தை கடித்து கொன்றுவிட்டு சென்றது தெரியவந்தது.
ஏற்கனவே சிறுத்தை புகுந்துள்ள நாகலேரி வட்டம் கிராமம், சிமுக்கபட்டில் இருந்து 6 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. காட்டில் இருந்து வந்த மேலும் ஒரு சிறுத்தை ஆடுகளை கடித்து கொன்றிருக்கலாம் என வனத்துறையினர் சந்தேகம் அடைந்துள்ளனர்.
ஆம்பூர் அருகே ஆந்திர மாநில எல்லையோரம் உள்ள அரங்கல்துருகம் கிராமத்தில் 2 நாட்களுக்கு முன்பு வீட்டின் அருகே கட்டியிருந்த கன்று குட்டியை சிறுத்தை கடித்து கொன்று விட்டு சென்று விட்டது. அந்த பகுதியில் வனத்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர்.
சிறுத்தை ஒரு நாளைக்கு 20 கிலோமீட்டர் தூரம் வரை பயணம் செய்யும். அனைத்து சம்பவத்திலும் ஒரே சிறுத்தை தான் அட்டூழியம் செய்துள்ளதா? அல்லது 3 சிறுத்தைகள் காட்டை விட்டு வெளியேறி உள்ளதா? என்பது குறித்து கால் தடம் மூலம் வனத்துறையினர் ஆய்வு செய்து வருகின்றனர்.