வல்லநாடு இரட்டைக்கொலை வழக்கு: ஆலங்குளம் கோர்ட்டில் அண்ணன்–தம்பி சரண்
வல்லநாடு அருகே நடந்த இரட்டைக்கொலையில் தேடப்பட்ட அண்ணன்–தம்பி ஆலங்குளம் கோர்ட்டில் சரண் அடைந்தனர்.
ஆலங்குளம்,
வல்லநாடு அருகே நடந்த இரட்டைக்கொலையில் தேடப்பட்ட அண்ணன்–தம்பி ஆலங்குளம் கோர்ட்டில் சரண் அடைந்தனர்.
தாத்தா–பேரன் கொலை
தூத்துக்குடி மாவட்டம் வல்லநாடு அருகே பக்கப்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் ராமையா. இவருடைய மகன் சுடலைமணி (வயது 18). இவர் நெல்லையில் உள்ள தனியார் ஜவுளி நிறுவனத்தில் ஊழியராக வேலை செய்து வந்தார். இவர் கடந்த 26–ந்தேதி இரவில் வேலை முடிந்ததும், வழக்கம்போல் பஸ்சில் தனது ஊருக்கு புறப்பட்டு சென்றார். சுடலைமணியை அழைத்து செல்வதற்காக அவருடைய தாத்தா முத்துசாமி (65) பக்கப்பட்டி விலக்கில் காத்து நின்றார்.
பஸ்சில் இருந்து கீழே இறங்கிய சுடலைமணி நாற்கர சாலையை கடக்க முயன்றார். அப்போது அங்கு இருளில் மறைந்து இருந்த மர்மநபர்கள் ஓடிச் சென்று சுடலைமணியை சுற்றி வளைத்து சரமாரியாக வெட்டிக் கொலை செய்தனர். இதனை தடுக்க முயன்ற முத்துசாமியையும் மர்மநபர்கள் அரிவாளால் வெட்டிக் கொலை செய்தனர்.
முன்விரோதம்
இந்த இரட்டைக்கொலை சம்பவம் குறித்து முறப்பநாடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில், கடந்த மே மாதம் பக்கப்பட்டி தாமிரபரணி ஆற்றில் குளித்தபோது, இரு தரப்பினருக்கு இடையே தகராறு ஏற்பட்டது. இதில் சுடலைமணியின் உறவினரான பிரமுத்து மகன் வடிவேல் முருகன் (25) அரிவாளால் அப்பகுதியைச் சேர்ந்த சுப்பையா மகன் சின்னதம்பியை (22) வெட்டினார். இதையடுத்து தீண்டாமை வன்கொடுமை தடுப்பு சட்டத்தில் முறப்பநாடு போலீசார் வழக்குப்பதிவு செய்து, வடிவேல் முருகனை கைது செய்தனர்.
இதனால் சின்னதம்பிக்கும், சுடலைமணிக்கும் இடையே முன்விரோதம் இருந்தது. இதையடுத்து இரவில் வேலை முடிந்து வந்த சுடலைமணியை சின்னதம்பி, அவருடைய அண்ணன் மாரிமுத்து (23), தம்பி அருண்குமார், மற்றொரு சின்னதம்பி ஆகிய 4 பேரும் சேர்ந்து கொலை செய்தனர். இதனை தடுக்க முயன்ற சுடலைமணியின் தாத்தா முத்துசாமியையும் அவர்கள் கொலை செய்தது போலீசாரின் விசாரணையில் தெரியவந்தது.
கோர்ட்டில் அண்ணன்–தம்பி சரண்
இந்த நிலையில் சின்னதம்பி, அவருடைய அண்ணன் மாரிமுத்து ஆகிய 2 பேரும் நெல்லை மாவட்டம் ஆலங்குளம் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் நேற்று மாலையில் சரண் அடைந்தனர். அவர்கள் 2 பேரையும் 15 நாட்கள் காவலில் வைக்க மாஜிஸ்திரேட்டு பிச்சைராஜன் உத்தரவிட்டார். இதையடுத்து சின்னதம்பி, மாரிமுத்து ஆகிய 2 பேரையும் போலீசார் பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைத்தனர்.
மேலும் தலைமறைவான அருண்குமார், மற்றொரு சின்னதம்பி ஆகிய 2 பேரையும் போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். அவர்களை பிடிக்க 3 போலீஸ் தனிப்படைகள் அமைக்கப்பட்டு உள்ளன. பக்கபட்டியில் தொடர்ந்து பதற்றம் நிலவுவதால், பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது. மேலும் சுற்றுவட்டார கிராமங்களிலும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர்.
Related Tags :
Next Story