திண்டுக்கல்லில் 16 வயது சிறுமி பலாத்காரம்; 2 ஆட்டோ டிரைவர்கள் போக்சோவில் கைது
திண்டுக்கல்லில் 16 வயது சிறுமியை பலாத்காரம் செய்த ஆட்டோ டிரைவர்கள் 2 பேர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டனர்.
திண்டுக்கல்,
திண்டுக்கல் நாகல்நகர் ரெயில்வே மேம்பாலத்தின் அடியில் முதியவர்கள், உடல் நலமில்லாதவர்கள், ஊனமுற்றவர்கள், குடும்பத்தினரால் கைவிடப்பட்டவர்கள் தங்கி அந்த வழியாக செல்பவர்களிடம் பிச்சை எடுத்து பிழைப்பு நடத்தி வருகின்றனர். மதுரையைச் சேர்ந்த ஒருவர் தனது 2 மகள்கள், ஒரு மகனுடன் இந்த பகுதியில் தங்கி பிச்சை எடுத்து வருகிறார். இவரது 16 வயதுடைய மகள் கடந்த சில நாட்களுக்கு முன் திடீரென்று காணாமல் போனார். பல்வேறு இடங் களில் மகளை தேடி வந்தார். இந்த நிலையில் நேற்று முன்தினம் அந்த சிறுமி திண்டுக்கல் ரெயில் நிலையத்தில் நின்று கொண்டு இருந்தார். உடனே மகளை அழைத்து வந்து விசாரித்தார்.
அப்போது தன்னை 2 ஆட்டோ டிரைவர்கள் அழைத்து சென்று பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறி கதறி அழுதார். இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த சிறுமியின் தந்தை திண்டுக்கல் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் முத்தமிழ்செல்வி, போக்சோ (பாலியல் குற்றங்களில் இருந்து சிறுமிகளை பாதுகாக்கும் சட்டம்) சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்.
விசாரணையில், அந்த சிறுமியை திண்டுக்கல் ரெயில் நிலையத்தில் ஆட்டோ ஓட்டி வரும் நாகல்நகரை சேர்ந்த சேக் பரீத் (வயது 28), தங்கராஜ் (34) ஆகியோர் அழைத்து சென்று பாலியல் பலாத்காரம் செய்தது தெரியவந்தது. இதையடுத்து, அவர்களை பிடித்து தீவிர விசாரணை நடத்தினார். அப்போது, அந்த சிறுமியை ஆசைவார்த்தை கூறி இருவரும் தனித்தனியாக அழைத்து சென்று பாலியல் பலாத்காரம் செய்ததை ஒப்புக்கொண்டனர்.
இதையடுத்து அவர்களை கைது செய்து திண்டுக்கல் மகிளா நீதிமன்ற நீதிபதி கருணாநிதி முன்னிலையில் போலீசார் ஆஜர்படுத்தினர். பின்னர் இருவரும் திண்டுக்கல் சிறையில் அடைக்கப்பட்டனர்.
Related Tags :
Next Story