உளுந்தூர்பேட்டை அருகே மினி லாரியில் கடத்திய 1,050 லிட்டர் சாராயம் பறிமுதல் - டிரைவர் கைது


உளுந்தூர்பேட்டை அருகே மினி லாரியில் கடத்திய 1,050 லிட்டர் சாராயம் பறிமுதல் - டிரைவர் கைது
x
தினத்தந்தி 28 Dec 2018 10:00 PM GMT (Updated: 28 Dec 2018 6:15 PM GMT)

உளுந்தூர்பேட்டை அருகே மினி லாரியில் கடத்திய 1,050 லிட்டர் சாராயம் பறிமுதல் செய்யப்பட்டது. இதுதொடர்பாக மினிலாரி டிரைவரை போலீசார் கைது செய்தனர்.

விழுப்புரம், 

புதுச்சேரியில் இருந்து உளுந்தூர்பேட்டை வழியாக சாராயம் கடத்தப்படுவதாக மத்திய குற்ற புலனாய்வு பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பேரில் மத்திய குற்ற புலனாய்வு பிரிவு இன்ஸ்பெக்டர் கோவிந்தசாமி, சப்-இன்ஸ்பெக்டர் அழகிரி ஆகியோர் தலைமையிலான போலீசார் உளுந்தூர்பேட்டை சுங்கச்சாவடி அருகே தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது புதுச்சேரி மார்க்கத்தில் இருந்து வேகமாக வந்த ஒரு மினி லாரியை போலீசார் மறித்து, அதனை ஓட்டி வந்த டிரைவரிடம் விசாரித்தனர். அதில் அவர் முன்னுக்குப்பின் முரணாக பதில் அளித்தார்.

இதனால் சந்தேகமடைந்த போலீசார் மினி லாரியில் சோதனை செய்தனர். அப்போது மினி லாரியில் 35 லிட்டர் கொள்ளளவு கொண்ட 30 கேன்களில் 1,050 லிட்டர் சாராயம் இருந்தது கண்டு பிடிக்கப்பட்டது. தொடர்ந்து போலீசார் மினி லாரி டிரைவரிடம் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தினர்.

விசாரணையில் அவர், புதுச்சேரி மாநிலம் திருவண்டார்கோவில் பகுதியை சேர்ந்த ரவி மகன் அசோக் (வயது 24) என்பதும், புதுச்சேரியில் இருந்து சாராயம் கடத்தி வந்ததும் தெரியவந்தது.

இதையடுத்து மத்திய குற்ற புலனாய்வு பிரிவு போலீசார் பிடிபட்ட டிரைவர் அசோக் மற்றும் 1,050 லிட்டர் சாராயம், மினி லாரி ஆகியவற்றை உளுந்தூர்பேட்டை கலால் (பொறுப்பு) இன்ஸ்பெக்டர் பூங்கோதையிடம் ஒப்படைத்தனர். தொடர்ந்து கலால் (பொறுப்பு) இன்ஸ்பெக்டர் பூங்கோதை வழக்குப்பதிவு செய்து அசோக்கை கைது செய்தார். மேலும் 1,050 லிட்டர் சாராயம் மற்றும் மினிலாரி பறிமுதல் செய்யப்பட்டது.

Next Story