நிவாரண பொருட்கள் கேட்டு 3 இடங்களில் பொதுமக்கள் சாலை மறியல் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் பங்கேற்பு


நிவாரண பொருட்கள் கேட்டு 3 இடங்களில் பொதுமக்கள் சாலை மறியல் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் பங்கேற்பு
x
தினத்தந்தி 29 Dec 2018 4:30 AM IST (Updated: 29 Dec 2018 1:04 AM IST)
t-max-icont-min-icon

நிவாரண பொருட்கள் கேட்டு புதுக்கோட்டை மாவட்டத்தில் 3 இடங்களில் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். அவர்களுக்கு ஆதரவு தெரிவித்து வெளிநாட்டு சுற்றுலா பயணிகளும் அதில் பங்கேற்றனர்.

கந்தர்வகோட்டை, 


கஜா புயலால் புதுக்கோட்டை மாவட்டம் பெரிதும் பாதிக்கப்பட்டது. இதனால், பொதுமக்கள் தங்களது வாழ்வாதாரத்தை இழந்து தவித்து வருகிறார்கள். அவர்களுக்கு தமிழக அரசு சார்பில் நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் கந்தர்வகோட்டை அருகே உள்ள வளவம்பட்டியை சேர்ந்த பொதுமக்கள் வருவாய்த்துறை அதிகாரிகள் சரியான முறையில் மீண்டும் கணக்கெடுத்து அனைவருக்கும் நிவாரணம் வழங்க வேண்டும் எனக்கூறி புதுக்கோட்டை-தஞ்சாவூர் தேசிய நெடுஞ்சாலையில் வளவம்பட்டியில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

அப்போது அந்த வழியாக வந்த வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் அவர்களின் கோரிக்கைகளை கேட்டறிந்ததோடு, அவர்களுக்கு ஆதரவு தெரிவித்து அவர்களும் சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து தகவல் அறிந்த கந்தர்வகோட்டை துணை தாசில்தார் ராமசாமி மற்றும் போலீசார் மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். இதில் உடன்பாடு ஏற்பட்டதை தொடர்ந்து மறியலில் ஈடுபட்டவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இதனால் அந்த பகுதியில் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

இதேபோல ஆதனக்கோட்டையை சேர்ந்த பொதுமக்கள் புதுக்கோட்டை-தஞ்சாவூர் சாலையில் மறியலில் ஈடுபட்டனர். அவர்களிடம் அதிகாரிகள் பேச்சு வார்த்தை நடத்தியதன்பேரில், மறியலை விலக்கி கொண்டனர்.

அறந்தாங்கி அருகே உள்ள ஆவணத்தான்கோட்டை ஊராட்சியில் உள்ள அனைவருக்கும் நிவாரணம் வழங்கக்கோரி ஆவணத்தான்கோட்டை கடைவீதியில் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த அறந்தாங்கி போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலமுருகன் மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் சாலை மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். இதில் உடன்பாடு ஏற்பட்டதை தொடர்ந்து அனைவரும் கலைந்து சென்றனர்.

அறந்தாங்கி அருகே சுப்பிரமணியபுரத்தில் அனைவருக்கும் நிவாரணம் வழங்க கோரி தி.மு.க. சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு ஆலங்குடி எம்.எல்.ஏ மெய்யநாதன் தலைமை தாங்கினார். கஜா புயலால் பாதிக்கப்பட்டு கடந்த 40 நாட்களை தாண்டியும் தமிழக அரசு உரிய நிவாரணம் வழங்காமல் காலம் தாழ்த்தி வருவதை கண்டித்து இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் கட்சி நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

கறம்பக்குடி அருகே உள்ள முதலிப்பட்டி ஊராட்சியில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இதில் சுமார் 600 குடும்பத்தினருக்கு மட்டுமே நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டு உள்ளது. ஆகவே, அனைவருக்கும் நிவாரண பொருட்கள் வழங்கக்கோரி கறம்பக்குடி தாலுகா அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். அவர்களிடம் கறம்பக்குடி தாசில்தார் சக்திவேல் பேச்சுவார்த்தை நடத்தினர். இதையடுத்து நிவாரண பொருட்கள் கிடைக்காதவர்கள் தாசில்தாரிடம் மனு கொடுத்துவிட்டு கலைந்து சென்றனர்.

Next Story