மாத்தூர் அருகே திருமணமான 11 நாளில் புதுப்பெண் தற்கொலை காதல் கணவர் இறந்த துக்கம் தாங்காமல் துயர முடிவு


மாத்தூர் அருகே திருமணமான 11 நாளில் புதுப்பெண் தற்கொலை காதல் கணவர் இறந்த துக்கம் தாங்காமல் துயர முடிவு
x
தினத்தந்தி 29 Dec 2018 4:15 AM IST (Updated: 29 Dec 2018 1:07 AM IST)
t-max-icont-min-icon

மாத்தூர் அருகே காதல் கணவர் இறந்த துக்கம் தாங்காமல் திருமணமான 11 நாளில் புதுப்பெண் தற்கொலை செய்து கொண்டார்.

ஆவூர், 


புதுக்கோட்டை மாவட்டம், மாத்தூர் அருகே உள்ள வெண்ணமுத்துப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் பழனியப்பன் மகன் பார்த்திபன்(வயது 24). இவர் திருச்சி மாவட்டம் துவாக்குடியில் உள்ள ஒரு தனியார் தொழிற்சாலையில் கிரேன் ஆபரேட்டராக வேலை பார்த்து வந்தார்.

பார்த்திபன், தனது வீட்டு அருகே உள்ள உறவினர் சங்கிலிமுத்துவின் மகள் அனுப்பிரியாவை(22) கடந்த 2 ஆண்டுகளுக்கு மேலாக காதலித்து வந்தார். இவர்களுடைய காதல் விவகாரம் பார்த்திபன் குடும்பத்திற்கு தெரியவந்தது. இதையடுத்து பார்த்திபனை, அவருடைய தாய் கவிதா கண்டித்தார். அனுப்பிரியாவை தஞ்சாவூர் மாவட்டம் பூதலூர் அருகே வெண்டையம்பட்டியில் உள்ள அவருடைய அக்காள் வீட்டிற்கு அவரது பெற்றோர் அனுப்பி வைத்தனர்.

இந்த நிலையில் கடந்த 18-ந் தேதி வெண்டையம்பட்டிக்கு சென்ற பார்த்திபன் அங்கு அனுப்பிரியாவை சந்தித்து, ‘நாம் இருவரும் திருமணம் செய்து கொள்வோம்’ என்று அழைத்தார். இந்த தகவல் அனுப்பிரியாவின் அக்காள் வீட்டுக்கு தெரிந்ததால் அவர்கள் அங்குள்ள ஒரு கோவிலில் வைத்து அன்று மாலையே இருவருக்கும் திருமணம் செய்து வைத்தனர். இதையறிந்த பார்த்திபனின் தாய் கவிதா அங்கு வந்து, பார்த்திபனை திட்டியதாக கூறப்படுகிறது.

பின்னர் வெண்ணமுத்துப்பட்டிக்கு சென்ற கவிதா, மறுநாள் செல்போனில் தொடர்பு கொண்டு மகனிடம் பேசியுள்ளார். அப்போது, ‘அந்த பெண்ணை விட்டுவிட்டு எங்களிடம் வரவில்லை என்றால் நான் தற்கொலை செய்துகொள்வேன்‘ என்று கூறினார். இதனால் மனவேதனை அடைந்த பார்த்திபன் வீட்டில் பூச்சிமருந்தை(விஷம்) குடித்தார். அவரை அனுப்பிரியா மற்றும் அவருடைய உறவினர்கள் மீட்டு தஞ்சாவூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி கடந்த 22-ந் தேதி பார்த்திபன் இறந்தார்.

இதைத்தொடர்ந்து மறுநாள் பிரேத பரிசோதனைக்கு பின்னர் பார்த்திபன் உடல் சொந்த ஊரான வெண்ணமுத்துப்பட்டிக்கு கொண்டுவந்து அடக்கம் செய்யப்பட்டது. அப்போது பார்த்திபனை கடத்தி சென்று கட்டாய திருமணம் செய்து வைத்து அவரை கொன்று விட்டனர் என்றும், அவருடைய சாவுக்கு அனுப்பிரியாவின் தாய்மாமன் சக்திவேல்தான் காரணம் என்றும் கூறி பார்த்திபனின் உறவினர்கள் சக்திவேல் வீட்டை அடித்து நொறுக்கினர்.

மேஜை, நாற்காலிகள், பீரோ, ஜன்னல் கதவு கண்ணாடி, டி.வி., பிரிட்ஜ் உள்ளிட்ட அனைத்து பொருட்களையும் உடைத்து சூறையாடினர். மேலும் பீரோ மற்றும் இரும்பு பெட்டியில் வைத்திருந்த 70 பவுன் நகை மற்றும் பணத்தை எடுத்து சென்றதாகவும் கூறப்படுகிறது.

இது தொடர்பாக சக்திவேலின் தாய் முத்துக்கண்ணு(65) மாத்தூர் போலீஸ் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் மாரிமுத்து, ஆறுமுகம், பாக்கியலெட்சுமி, ராஜ்குமார் உள்பட 15 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதேபோல் தங்களை தாக்கியதாக பார்த்திபன் குடும்பத்தினர் மாத்தூர் போலீசில் கொடுத்த புகாரின்பேரில் சக்திவேல்(39), இளையராஜா, கணேசமூர்த்தி, சுரேஷ், முத்து என்ற குமரேசன் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த நிலையில் அனுப்பிரியா வெண்ணமுத்துப்பட்டிக்கு நேற்று வந்தார். கணவர் இறந்த துக்கம் தாங்காமல் வீட்டில் அவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து தகவல் அறிந்த மாத்தூர் போலீசார் விரைந்து வந்து அனுப்பிரியாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். காதல் கணவர் இறந்ததால் மனைவி தற்கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Next Story