பத்திரப்பதிவு இணைப்பதிவாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் திடீர் சோதனை கணக்கில் வராத ரூ.1¾ லட்சம் சிக்கியது


பத்திரப்பதிவு இணைப்பதிவாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் திடீர் சோதனை கணக்கில் வராத ரூ.1¾ லட்சம் சிக்கியது
x
தினத்தந்தி 29 Dec 2018 3:45 AM IST (Updated: 29 Dec 2018 1:43 AM IST)
t-max-icont-min-icon

திருவண்ணாமலை பத்திரப்பதிவு இணைப்பதிவாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் நடத்திய சோதனையில் கணக்கில் வராத ரூ.1¾ லட்சம் சிக்கியது.

திருவண்ணாமலை,

திருவண்ணாமலை தாலுகா அலுவலக வளாகத்தில் தாலுகா அலுவலகம், கிளை சிறைச்சாலை, பத்திரப்பதிவு இணைப்பதிவாளர் அலுவலகம், உழவர் சந்தை என பல்வேறு அலுவலகங்கள் உள்ளன.

இணைப் பதிவாளர் அலுவலகத்திற்கு தினமும் பலர் நிலம் வாங்குவது, விற்பது தொடர்பாக பத்திரப்பதிவு செய்வதற்கு வருகின்றனர்.

இங்கு சார் பதிவாளராக அசோக்குமார் பணியாற்றி வருகிறார். இந்த அலுவலகத்தில் பத்திரப்பதிவு செய்வதற்கு ஆயிரக்கணக்கில் லஞ்சம் பெறுவதாக திருவண்ணாமலை லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

அதன்பேரில் நேற்று மாலை லஞ்ச ஒழிப்புத்துறை துணை போலீஸ் சூப்பிரண்டு சரவணக்குமார் தலைமையில் இன்ஸ்பெக்டர்கள் அருண்பிரசாத், ரஜினிகாந்த் மற்றும் போலீசார் இந்த அலுவலகத்திற்கு வந்தனர். அவர்கள் இந்த அலுவலகத்தில் திடீர் சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது பத்திரப்பதிவு இணை பதிவாளர் உள்பட அலுவலகத்தில் பணியாற்றுபவர்கள் மற்றும் பத்திரம் பதிவுக்காக வந்தவர்களை போலீசார் அனைவரையும் விசாரணை வளையத்துக்குள் கொண்டு வந்தனர். அலுவலகத்தில் இருந்தவர்களை அப்படியே உள்ளேயே வைத்து கதவை பூட்டி கொண்டு ரகசிய விசாரணை நடத்தினர்.

அந்த சோதனை நேற்று மாலை சுமார் 5 மணிக்கு தொடங்கி இரவு 10 மணி வரை நடந்தது. இதில் கணக்கில் வராத ரூ.1 லட்சத்து 80 ஆயிரம் கைப்பற்றப்பட்டுள்ளதாக லஞ்ச ஒழிப்புத் துறை போலீஸ் தரப்பில் கூறப்பட்டது. இது தொடர்பாக சம்பந்தப்பட்ட அலுவலர்களிடம் விசாரணை நடந்து வருகிறது.

Next Story