திருக்காட்டுப்பள்ளி அருகே காவிரி ஆற்றில் கரை ஒதுங்கிய ஆண், பெண் உடல்கள் - யார் அவர்கள்? போலீசார் விசாரணை


திருக்காட்டுப்பள்ளி அருகே காவிரி ஆற்றில் கரை ஒதுங்கிய ஆண், பெண் உடல்கள் - யார் அவர்கள்? போலீசார் விசாரணை
x
தினத்தந்தி 29 Dec 2018 4:45 AM IST (Updated: 29 Dec 2018 3:45 AM IST)
t-max-icont-min-icon

திருக்காட்டுப்பள்ளி அருகே காவிரி ஆற்றில் கரை ஒதுங்கிய ஆண், பெண் உடல்களால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. அவர்கள் யார்? என்று போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

திருக்காட்டுப்பள்ளி,

தஞ்சை மாவட்டம் திருக்காட்டுப்பள்ளி அருகே உள்ள திருச்சினம்பூண்டி என்ற இடத்தில் அம்பேத்கர் நகர் அருகே காவிரி ஆற்றில் நேற்று மாலை ஆண் மற்றும் பெண் உடல்கள் கரை ஒதுங்கியது. இதை பார்த்ததும் அந்த பகுதி மக்கள் அதிர்ச்சி அடைந்தனர். ஆற்றில் ஆண், பெண் உடல்கள் மிதந்து வந்த செய்தி காட்டுத்தீ போல் பரவியதால் சம்பவ இடத்திற்கு அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் திரண்டு வந்தனர்.

இது குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவல் அறிந்து தோகூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் கென்னடி, சப்-இன்ஸ்பெக்டர் கார்த்தி ஆகியோர் விரைந்து வந்தனர். அங்கு வந்த போலீஸ் அதிகாரிகள், ஆற்றில் கரை ஒதுங்கிய ஆண் மற்றும் பெண் உடல்களை கரைக்கு கொண்டு வந்தனர்.

பிணமாக மிதந்து வந்த ஆணுக்கு 40 வயது இருக்கும். அவரது உடலில் டவுசர் மட்டும் இருந்தது. அந்த டவுசருக்குள் இருந்த பையில் லைசென்சு மற்றும் ஆதார் கார்டு இருந்தது. அவற்றை கைப்பற்றிய போலீசார், அவர் யார்? என்பது குறித்து விசாரித்து வருகின்றனர்.

இதேபோல் பிணமாக மிதந்து வந்த பெண்ணுக்கு 45 வயது இருக்கும். அவர் பாவாடையும், ஜாக்கெட் மட்டும் அணிந்திருந்தார். இருவரது உடல்களும் சிதைந்து அழுகிய நிலையில் காணப்பட்டது.

பிணமாக கிடந்த ஆணின் டவுசரில் இருந்து கைப்பற்றப்பட்டவற்றில் வக்கீல் ஒருவரின் விசிட்டிங் கார்டு இருந்தது. ஆதார் கார்டு மற்றும் பான்கார்டில் முத்துராஜ் என்று உள்ளது. அடையாள அட்டை ஒன்றில் சத்தியராஜ் என்று உள்ளது. இதனால் போலீசார் குழப்பம் அடைந்து அதில் உள்ள செல்போன் எண்களுக்கு தொடர்பு கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.

கைப்பற்றபட்ட இரண்டு உடல்களையும் போலீசார் பிரேத பரிசோதனைக்காக தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


Next Story