வட்டார வேளாண்மை பொறியியல் பணி கூட்டுறவு மைய தேர்தல்: இறுதி வேட்பாளர் பட்டியல் சம்பந்தமாக அ.தி.மு.க.வினர் இடையே மோதல்


வட்டார வேளாண்மை பொறியியல் பணி கூட்டுறவு மைய தேர்தல்: இறுதி வேட்பாளர் பட்டியல் சம்பந்தமாக அ.தி.மு.க.வினர் இடையே மோதல்
x
தினத்தந்தி 29 Dec 2018 3:45 AM IST (Updated: 29 Dec 2018 4:17 AM IST)
t-max-icont-min-icon

பழனி வட்டார வேளாண்மை பொறியியல் பணி கூட்டுறவு மைய தேர்தலையொட்டி இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடுவது சம்பந்தமாக அ.தி.மு.க.வினர் இடையே மோதல் ஏற்பட்டது.

பழனி, 

திண்டுக்கல் மாவட்டம், பழனியை அடுத்த சிவகிரிபட்டி தனியார் திருமண மண்டப வளாகத்தில் பழனி வட்டார வேளாண்மை பொறியியல் பணி கூட்டுறவு மையம் செயல்பட்டு வருகிறது. தலைவர், துணை தலைவர் உள்பட 7 நிர்வாகிகள் இந்த மையத்தை செயல்படுத்தி வந்தனர். இந்த நிலையில் மையத்துக்கான புதிய தலைவர், துணை தலைவர் மற்றும் நிர்வாகிகளுக்கான தேர்தல் கடந்த சில வாரங்களுக்கு முன்பு நடந்தது.

இதில் நிர்வாகிகளாக அ.தி.மு.க.வை சேர்ந்த 5 பேரும், தி.மு.க. சேர்ந்த 2 பேரும் தேர்வு செய்யப்பட்டனர். ஆனால் தி.மு.க.வினர் 2 பேரும் தங்கள் பதவியை ராஜினாமா செய்ததால் அந்த 2 பதவிகளுக்கு வருகிற 2-ந்தேதி தேர்தல் நடத்தப்படும் என தேர்தல் அதிகாரி செல்வம் அறிவித்தார்.

மேலும் 2 பதவிகளில் ஒரு பதவி தாழ்த்தப்பட்ட பிரிவினரை சேர்ந்தவருக்கு ஒதுக்கப்பட்டது. எனவே அந்த பதவிக்கு ரெங்கநாதன் என்பவர் வேட்புமனு தாக்கல் செய்தார். மீதமுள்ள ஒரு பதவிக்கு ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளரான கருப்புச்சாமி, அவருடைய மனைவி சரோஜாவும், எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்களான செல்வக்குமார் மற்றும் அப்பாஸ் மந்திரி ஆகியோர் மனு தாக்கல் செய்தனர்.

இந்த நிலையில் இறுதி வேட்பாளர் பட்டியலை வெளியிடுவது தொடர்பான ஆலோசனை கூட்டம் நேற்று மாலையில், கூட்டுறவு மைய அலுவலகத்தில் தேர்தல் அதிகாரி முன்னிலையில் நடந்தது. அப்போது கருப்புச்சாமியை வேட்பாளராக தேர்வு செய்ய ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர்களும், செல்வக்குமாரை வேட்பாளராக தேர்வு செய்ய எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்களும் வலியுறுத்தினர். ஒரு கட்டத்தில் அ.தி.மு.க.வை சேர்ந்த இருதரப்பினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. மோதல் முற்றிய நிலையில் இருதரப்பினரும் ஒருவரையொருவர் தாக்கிக்கொண்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதனை அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் பார்த்து, அவர்களை தடுத்து விலக்கி விட்டனர்.

இதற்கிடையே மோதல் சம்பவம் காரணமாக தேர்தல் தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைப்பதாக தேர்தல் அதிகாரி அறிவித்தார்.

Next Story