கர்நாடக மந்திரிசபையில் புதியதாக இணைந்த 8 மந்திரிகளுக்கு இலாகா ஒதுக்கீடு


கர்நாடக மந்திரிசபையில் புதியதாக இணைந்த 8 மந்திரிகளுக்கு இலாகா ஒதுக்கீடு
x
தினத்தந்தி 29 Dec 2018 5:26 AM IST (Updated: 29 Dec 2018 5:26 AM IST)
t-max-icont-min-icon

கர்நாடக மந்திரி சபையில் புதியதாக இணைந்த 8 மந்திரிகளுக்கு இலாகாக்களை ஒதுக்கி காங்கிரஸ் கட்சி அறிவித்துள்ளது. இதில் பரமேஸ்வர் வசம் இருந்த போலீஸ் துறை எம்.பி.பட்டீலிடம் வழங்கப்பட்டது.

பெங்களூரு,

கர்நாடகத்தில் காங்கிரஸ்-ஜனதா தளம் (எஸ்) கூட்டணி ஆட்சி நடக்கிறது.

முதல்-மந்திரியாக குமாரசாமி இருந்து வருகிறார். மந்திரிசபையில் காங்கிரசுக்கு 6 இடங்கள் காலியாக இருந்தன. அதை நிரப்பும் வகையில் கடந்த 22-ந் தேதி கர்நாடக மந்திரிசபை விரிவாக்கம் நடைபெற்றது.

அப்போது மந்திரிசபையில் இருந்து 2 பேர் நீக்கப்பட்டனர். புதிதாக எம்.பி.பட்டீல், துகாராம், சதீஸ் ஜார்கிகோளி, எம்.டி.பி.நாகராஜ், பரமேஸ்வர் நாயக், ஆர்.பி.திம்மாப்பூர், சி.எஸ்.சிவள்ளி, ரஹீம்கான் ஆகிய 8 புதிய மந்திரிகள் பதவி ஏற்றனர்.

அவர்களுக்கு இலாகா ஒதுக்குவதில் சிக்கல் ஏற்பட்டது. இதனால் அவர்கள் பதவி ஏற்று 6 நாட்கள் ஆகியும் இலாகா ஒதுக்கீடு செய்யப்படாமல் இருந்தது. இதையடுத்து காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் வேணுகோபால் பெங்களூரு வந்து, கட்சி தலைவர்களுடன் ஆலோசனை நடத்தினார்.

அப்போது 2 துறைகளை நிர்வகிக்கும் மந்திரிகள் ஒன்றை விட்டுக்கொடுக்க வலியுறுத்தப்பட்டது. ஆனால் 2 துறைகளை நிர்வகிக்கும் மந்திரிகள் அதற்கு சம்மதிக்கவில்லை. இதனால், புதிய மந்திரிகளுக்கு இலாகா ஒதுக்குவதில் பிரச்சினை நிலவி வந்தது. இதனால் வேணுகோபால் தலைமையில் நடந்த ஆலோசனை கூட்டத்தில் எந்த முடிவும் எட்டப்படவில்லை.

அதன்பிறகு வேணுகோபால் டெல்லி சென்று அகில இந்திய காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியுடன் ஆலோசனை நடத்தினார். அதைத்தொடர்ந்து புதிய மந்திரி களுக்கு இலாகா ஒதுக்கீடு மற்றும் ஏற்கனவே உள்ள சில காங்கிரஸ் மந்திரிகளின் இலாகாக்கள் மாற்றி அமைக்கப்பட்டுள்ளன. இதற்கான அறிவிப்பை காங்கிரஸ் கட்சி நேற்று வெளியிட்டது.

அதன்படி துணை முதல்-மந்திரி பரமேஸ்வரிடம் இருந்த போலீஸ் துறையை பறித்து எம்.பி.பட்டீலுக்கு வழங்கப்பட்டுள்ளது. அதற்கு பதிலாக பரமேஸ்வருக்கு சட்டம் மற்றும் சட்டசபை விவகாரம், தகவல் தொழில்நுட்பம், உயிரி தொழில்நுட்பத்துறை ஒதுக்கப்பட்டு உள்ளது. பரமேஸ்வருக்கு ஒதுக்கப்பட்டுள்ள சட்டம் மற்றும் சட்டசபை விவகாரத்துறை மந்திரி கிருஷ்ண பைரே கவுடாவிடம் இருந்தது குறிப்பிடத்தக்கது.

அதே போல் மந்திரி டி.கே.சிவக்குமாரிடம் இருந்து மருத்துவ கல்வித்துறை பறிக்கப்பட்டு, துகாராமுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. அதே போல் மந்திரி யு.டி.காதரிடம் இருந்து வீட்டு வசதித்துறை பறிக்கப்பட்டு, அந்த துறை புதிய மந்திரி எம்.டி.பி.நாகராஜூவுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.

மந்திரி ஜெயமாலாவிடம் இருந்து கன்னட கலாசார துறை பறிக்கப்பட்டு, அந்த இலாகா மந்திரி டி.கே.சிவக்குமாருக்கு வழங்கப்பட்டுள்ளது. ராஜசேகர் பட்டீல் வசம் இருந்த இந்து அறநிலையத்துறை, புதிய மந்திரி பரமேஸ்வர் நாயக்கிற்கு ஒதுக்கப்பட்டுள்ளது. புதிய மந்திரிகளுக்கு துறை ஒதுக்கீடு உள்பட 22 காங்கிரஸ் மந்திரிகளின் இலாகா விவரம் வருமாறு:-

1. எம்.பி.பட்டீல் - போலீஸ்

2. துகாராம் - மருத்துவ கல்வி

3. எம்.டி.பி.நாகராஜ் - வீட்டு வசதி

4. பரமேஸ்வர் நாயக் - இந்து அறநிலையம், திறன் மேம்பாடு

5. ரஹீம்கான் - இளைஞர் நலன், விளையாட்டு

6. ஆர்.பி.திம்மாப்பூர் - சர்க்கரை

7. சி.எஸ்.சிவள்ளி - நகரசபை நிர்வாகம்

8. சதீஸ் ஜார்கிகோளி - வனம், சுற்றுச்சூழல்

9. பரமேஸ்வர்(துணை முதல்-மந்திரி) - பெங்களூரு நகர வளர்ச்சி, சட்டம், நீதி, மனித உரிமைகள், தகவல் தொழில்நுட்பம், உயிரி தொழில்நுட்பம், அறிவியல் தொழில்நுட்பம்

10. டி.கே.சிவக்குமார் - நீர்ப்பாசனம், கன்னட கலாசார வளர்ச்சி,

11. ஆர்.வி.தேஷ்பாண்டே - வருவாய்

12. கே.ஜே.ஜார்ஜ் - தொழில்துறை

13. கிருஷ்ண பைரேகவுடா - கிராம வளர்ச்சி, பஞ்சாயத்து ராஜ்

14. யு.டி.காதர் - நகர வளர்ச்சி

15. ஜெயமாலா - பெண்கள் மற்றும் குழந்தைகள் நலன்

16. சிவசங்கரரெட்டி - விவசாயம்

17. பிரியங்க் கார்கே - சமூக நலன்

18. ஜமீர்அகமதுகான் - உணவு, பொதுவிநியோகம், சிறுபான்மையினர் நலன், வக்பு

19. புட்டரங்கஷெட்டி - பிற்படுத்தப்பட்டோர் நலன்

20. சிவானந்தபட்டீல் - சுகாதாரம், குடும்ப நலன்

21. வெங்கடரமணப்பா - தொழிலாளர் நலன்

22. ராஜசேகர் பட்டீல் - கனிம வளம்

கர்நாடக காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் வேணுகோபால், இந்த இலாகா ஒதுக்கீடு பட்டியலை முதல்-மந்திரி குமாரசாமிக்கு அனுப்பி வைத்தார். இந்த துறைகளை காங்கிரஸ் மந்திரிகளுக்கு ஒதுக்குமாறு அவர் கேட்டுக் கொண்டார்.

அதன்படி கர்நாடக அரசும், இந்த இலாகா ஒதுக்கீடு அரசாணையை கவர்னர் வஜூபாய் வாலாவுக்கு அனுப்பி வைத்தது. நேற்று இரவு கவர்னர் வஜூபாய் வாலா, இந்த இலாகா ஒதுக்கீடு அரசாணைக்கு ஒப்புதல் அளித்தார். போலீஸ் துறையை பறித்ததால், பரமேஸ்வர் அதிருப்தியில் இருப்பதாக கூறப்படுகிறது.

Next Story