2-ம் போக சாகுபடிக்கு தண்ணீர் வழங்கக்கோரி நெல் நாற்றுகளுடன் விவசாயிகள் மறியல்


2-ம் போக சாகுபடிக்கு தண்ணீர் வழங்கக்கோரி நெல் நாற்றுகளுடன் விவசாயிகள் மறியல்
x
தினத்தந்தி 29 Dec 2018 4:15 AM IST (Updated: 29 Dec 2018 5:43 AM IST)
t-max-icont-min-icon

குலமங்கலத்தில் 2-ம் போக சாகுபடிக்கு சீராக தண்ணீர் வழங்கக்கோரி நெல் நாற்றுகளுடன் விவசாயிகள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

அலங்காநல்லூர், 

அலங்காநல்லூர் அருகே குலமங்கலம் பூதகுடி, எழும்பூர் மற்றும் திருப்பாலை உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 8 ஆயிரம் ஏக்கருக்கு மேல் 2-ம் போக நெல் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. இதற்கிடையே பெரியாறு கால்வாயில் இருந்து முறைவைத்து பாசனத்திற்கு தண்ணீர் திறக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதனால் பல இடங்களில் நெற்பயிர்கள் தண்ணீரின்றி வாடி, வதங்கி காணப்பட்டது. இதனால் முல்லை பெரியாறு வாய்க்காலில் முறையாக தண்ணீர் திறக்க வேண்டும் என்று சம்பந்தப்பட்ட பொதுப்பணித்துறை அதிகாரிகளிடம் விவசாயிகள் புகார் அளித்தனர். ஆனால் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை.

தொடர்ந்து புகார் தெரிவிக்கப்பட்டதன் பேரில் குறிப்பிட்ட காலக்கெடுவில் குறைந்த அளவு தண்ணீர் வந்தது. ஆனால் அது விவசாயிகளுக்கு போதுமானதாக இல்லை.

இந்தநிலையில் சீராக தண்ணீர் வழங்க வலியுறுத்தி குலமங்கலம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் நெல் நாற்றுகளுடன் நேற்று மதுரை-குலமங்கலம் சாலையில் திடீர் மறியலில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் நெல் நாற்றுகளை சாலையில் போட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அந்த சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

இதுகுறித்து தகவல் அறிந்த பொதுப்பணித்துறை அதிகாரிகள் மறியலில் ஈடுபட்ட விவசாயிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர். அதன்பிறகு சாலை மறியலை விவசாயிகள் கைவிட்டு கலைந்து சென்றனர்.

Next Story