காட்டுப்பன்றிகளை கட்டுப்படுத்த வனத்துறையினர் மூலம் நடவடிக்கை - கலெக்டர் நடராஜன் உறுதி
உசிலம்பட்டி பகுதியில் விளை நிலங்களில் புகுந்து பயிர்களை சேதப்படுத்தும் காட்டுப்பன்றிகளை கட்டுப்படுத்த வனத் துறையினர் உதவியுடன் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கலெக்டர் நடராஜன் தெரிவித்தார்.
உசிலம்பட்டி,
உசிலம்பட்டி, செல்லம்பட்டி, சேடபட்டி ஆகிய ஒன்றியங்களில் வேளாண் வளர்ச்சித்திட்டங்கள் மற்றும் அப்பகுதிகளில் சாகுபடி செய்யப்பட்டுள்ள நெற்பயிர் மற்றும் மானாவாரி பயிர்களை மாவட்ட கலெக்டர் நடராஜன் நேற்று ஆய்வு செய்தார். இதில் செல்லம்பட்டி அருகே உள்ள நாட்டாமங்கலத்தில் தேசிய வேளாண்மை வளர்ச்சி திட்டத்தின்கீழ் எந்திரத்தின் மூலம் நடவு செய்யப்பட்ட நெற்பயிர்களை ஆய்வு செய்தார். அதன்பின்பு உசிலம்பட்டி அருகே உள்ள நல்லுத்தேவன்பட்டியில் நீடித்த நிலையான மானாவாரி வேளாண்மை இயக்கத்தின்கீழ் ரூ.10 லட்சம் மானிய விலையில் வழங்கப்பட்டுள்ள எந்திரத்தை பார்வை யிட்ட கலெக்டர், அந்த எந்திரத்தினால் விவசாயிகள் என்னென்ன பயன் பெறுவார்கள் என்பது குறித்து கேட்டறிந்தார். அப்போது அந்த எந்திரத்தின் மூலம் பயறுவகைகளை உடைத்தல், தானியங்களை வறுத்தல், எண்ணெய் வித்துகளில் இருந்து எண்ணெய் எடுக்க முடியும் என்பதனை அதிகாரிகள் செயல் விளக்கம் அளித்தனர்.
வகுரணி, பெருமாள்கோவில்பட்டி உள்ளிட்ட கிராமங்களில் அவர் ஆய்வு மேற்கொண்டார். மேலும் சேடபட்டியில் பயிரிடப்பட்டுள்ள மக்காச்சோளம் மற்றும் குதிரைவாலி பயிர்களை கலெக்டர் நடராஜன் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
இந்த ஆய்வின்போது, கலெக்டரிடம் விவசாயிகள் கோரிக்கை மனு ஒன்று அளித்தனர். அதில், மலை அடிவார கிராமங்களில் உள்ள தோட்டங்களில் காட்டுப்பன்றிகள் கூட்டம், கூட்டமாக வந்து விளை பொருட்களை சேதப்படுத்தி வருகிறது. எனவே காட்டுப் பன்றிகளிடம் இருந்து பயிர்களை காப்பாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியிருந்தனர். மனுவை பெற்றுக்கொண்ட கலெக்டர், வரும் காலங்களில் காட்டுப்பன்றிகள் கட்டுப்படுத்தி விவசாயிகளுக்கு ஏற்படும் அழிவை தடுக்க வனத்துறையினர் உதவியுடன் நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்தார்.
இந்த ஆய்வில் வேளாண்மை துறை இணை இயக்குனர் குமாரவடிவேல், துணை இயக்குனர் விஜயலட்சுமி, உசிலம்பட்டி வேளாண்மை உதவி இயக்குனர் தனுஷ்கோடி, செல்லம்பட்டி வேளாண்மை துணை இயக்குனர், உசிலம்பட்டி தாசில்தார் நவநீதகிருஷ்ணன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.
Related Tags :
Next Story