புத்தாண்டு பாதுகாப்பு ஏற்பாடுகள்: பாரடைஸ் பீச்சில் போலீஸ் டி.ஜி.பி. சுந்தரி நந்தா ஆய்வு


புத்தாண்டு பாதுகாப்பு ஏற்பாடுகள்: பாரடைஸ் பீச்சில் போலீஸ் டி.ஜி.பி. சுந்தரி நந்தா ஆய்வு
x
தினத்தந்தி 29 Dec 2018 5:54 AM IST (Updated: 29 Dec 2018 5:54 AM IST)
t-max-icont-min-icon

புத்தாண்டு பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து பாரடைஸ் பீச்சில் போலீஸ் டி.ஜி.பி. சுந்தரி நந்தா ஆய்வு செய்தார்.

அரியாங்குப்பம்,

புதுச்சேரியில் ஆங்கில புத்தாண்டு வரவேற்று பல்வேறு கேளிக்கை நிகழ்ச்சிகளுக்கு பல்வேறு ஓட்டல்கள் ஏற்பாடு செய்துள்ளது. இதில் கலந்துகொள்ள வெளியூர் மற்றும் வெளிநாடுகளில் இருந்து சுற்றுலா பயணிகள் குவிந்து வருகின்றனர்.

இவர்களுக்கு பாதுகாப்பு அளிக்கவும், கொண்டாட்டங்களின்போது அசம்பாவித சம்பவம் ஏற்படாமல் இருக்கவும் தீவிர கண்காணிப்பில் ஈடுபட போலீசாருக்கு டி.ஜி.பி. சுந்தரி நந்தா உத்தரவிட்டுள்ளார். அதன்பேரில் புதுவை போலீசார் தீவிர பாதுகாப்பு ஏற்பாடுகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில் சின்ன வீராம்பட்டினம் மற்றும் நோணாங்குப்பம் சுண்ணாம்பாறு படகு குழாம், பாரடைஸ் பீச் ஆகிய இடங்களில் புத்தாண்டு கொண்டாட்டத்துக்கு செய்யப்பட்டுள்ள பாதுகாப்பு ஏற்பாடுகளை போலீஸ் டி.ஜி.பி. சுந்தரி நந்தா நேற்று திடீர் ஆய்வு செய்தார்.

அங்கு செய்யப்பட்டுள்ள பாதுகாப்பு ஏற்பாடுகள், வாகன நிறுத்தம் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் குறித்து போக்குவரத்து போலீஸ் சூப்பிரண்டு ரச்சனாசிங், தெற்கு பகுதி போலீஸ் சூப்பிரண்டு அப்துல் ரகீம் ஆகியோரிடம் டி.ஜி.பி. கேட்டறிந்தார். கடற்கரை பகுதியில் தற்காலிக கண்காணிப்பு கோபுரங்கள் மற்றும் கண்காணிப்பு கேமராக்கள் அமைத்து பாதுகாப்பு பணியில் ஈடுபட போலீசாருக்கு அவர் ஆலோசனை கூறினார்.

ஆய்வின்போது சீனியர் போலீஸ் சூப்பிரண்டு அபூர்வ குப்தா, போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார், சுற்றுலாத்துறை மேலாண் இயக்குனர் முருகேசன் மற்றும் போலீஸ் அதிகாரிகள் உடனிருந்தனர்.

Next Story