புதிய பஸ் நிலையம் எதிரில் ஏ.டி.எம்.எந்திரத்தை உடைத்து பல லட்சம் ரூபாய் கொள்ளை துணிகர கொள்ளையில் ஈடுபட்ட பெண்ணுக்கு வலைவீச்சு


புதிய பஸ் நிலையம் எதிரில் ஏ.டி.எம்.எந்திரத்தை உடைத்து பல லட்சம் ரூபாய் கொள்ளை துணிகர கொள்ளையில் ஈடுபட்ட பெண்ணுக்கு வலைவீச்சு
x
தினத்தந்தி 29 Dec 2018 5:58 AM IST (Updated: 29 Dec 2018 5:58 AM IST)
t-max-icont-min-icon

புதுச்சேரி புதிய பஸ் நிலையம் எதிரே உள்ள தனியார் வங்கி ஏ.டி.எம். எந்திரத்தை உடைத்து பல லட்சம் ரூபாயை மர்ம பெண் கொள்ளையடித்துச் சென்றுவிட்டார். அவளை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.

புதுச்சேரி,

புதுச்சேரி மறைமலை அடிகள் சாலையில் புதிய பஸ் நிலையத்துக்கு எதிர்புறத்தில் ஏராளமான கடைகள், வர்த்தக நிறுவனங்கள் அமைந்துள்ளன. அங்கு ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கிக்கு சொந்தமான ஏ.டி.எம். மையம் உள்ளது. இந்த நிலையில் நேற்று இரவு 11 மணி அளவில் இந்த ஏ.டி.எம். மையத்துக்கு ஒரு இளம் பெண் வந்தார். பணம் எடுக்க செல்வதுபோல் உள்ளே சென்ற அவர், திடீரென ஏ.டி.எம். எந்திரத்தை முறைகேடாக கையாண்டு, அதில் உள்ள பணத்தை கொள்ளையடிக்கும் முயற்சியில் ஈடுபட்டார்.

உடனே ஏ.டி.எம். எந்திரத்துடன் இணைக்கப்பட்டிருந்த கம்ப்யூட்டர், எந்திரம் முறைகேடாக கையாயளப்பட்டது குறித்து உடனடியாக மும்பையில் உள்ள கட்டுப்பாட்டு மையத்துக்கு தானியங்கி முறையில் தகவல் அளித்தது. உடனே அந்த கட்டுப்பாட்டு மையத்தில் இருந்த கண்காணிப்பாளர்கள் உடனடியாக புதுச்சேரி ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கி அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்து அங்கு சென்று பணத்தை கொள்ளையடிக்கும் முயற்சியை தடுக்கும்படி உத்தரவிட்டனர். மேலும் உருளையன்பேட்டை போலீஸ் நிலையத்துக்கும் அதுகுறித்து தகவல் கொடுத்தனர்.

அதைத் தொடர்ந்து வங்கி அதிகாரிகள் மற்றும் உருளையன்பேட்டை போலீசார் அங்கு விரைந்து வந்தனர். ஆனால் அதற்குள் அந்த இளம் பெண் தனது கைவரிசையை முடித்துக்கொண்டு ஏ.டி.எம். எந்திரத்தில் இருந்த பணத்தை கொள்ளையடித்துவிட்டு அங்கிருந்து தப்பிச்சென்றுவிட்டார்.

அதனால் கொள்ளையை தடுப்பதற்காக அங்கு விரைந்து வந்த வங்கி அதிகாரிகள் மற்றும் போலீசார் ஏமாற்றம் அடைந்தனர். பின்னர் வங்கி அதிகாரிகள் ஏ.டி.எம். எந்திரத்தை திறந்து அதில் இருந்து எவ்வளவு பணம் கொள்ளையடித்துச் செல்லப்பட்டது என்பதை கண்டறியும் பணியில் ஈடுபட்டனர். மேலும் மையத்தின் உள்புறத்தில் அமைக்கப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளையும் அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.

இந்த சம்பவத்தில் ஏ.டி.எம். எந்திரத்தில் வைக்கப்பட்டிருந்த பணத்தில் இருந்த ரூ.5 லட்சம் வரை கொள்ளையடித்துச் செல்லப்பட்டிருக்கலாம் என்று அதிகாரிகள் தரப்பில் முதற்கட்டமாக தெரிவிக்கப்பட்டது. இருந்த போதிலும் எவ்வளவு பணம் கொள்ளையடிக்கப்பட்டது என்பது முழுமையாக கணக்கிட்டபிறகே தெரிய வரும் என்றும் அவர்கள் தெரிவித்தனர். இந்த ஏ.டி.எம். மையம் மிக அருகில்தான் புதுச்சேரி சீனியர் போலீஸ் சூப்பிரண்டு அலுவலகமும், உருளையன்பேட்டை போலீஸ் நிலையமும் அமைந்துள்ளன.

இந்த துணிகர கொள்ளையில் ஈடுபட்ட இளம்பெண்ணை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

Next Story