பாலக்கோடு பகுதியில் கடும் வறட்சியால் காய்ந்து வரும் மரவள்ளிக்கிழங்கு விவசாயிகள் கவலை


பாலக்கோடு பகுதியில் கடும் வறட்சியால் காய்ந்து வரும் மரவள்ளிக்கிழங்கு விவசாயிகள் கவலை
x
தினத்தந்தி 30 Dec 2018 4:30 AM IST (Updated: 29 Dec 2018 7:18 PM IST)
t-max-icont-min-icon

பாலக்கோடு பகுதியில் கடும் வறட்சியால் மரவள்ளிக்கிழங்கு அறுவடை செய்யாமல் காய்ந்து வருகிறது. இதனால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

பாலக்கோடு,

தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு, சோமனஅள்ளி, அலகம்பட்டி, குத்தலஅள்ளி, காட்டம்பட்டி, பேகாரஅள்ளி, புலிகரை, நக்கல்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் அதிக அளவில் மரவள்ளிக்கிழங்கை விவசாயிகள் சாகுபடி செய்து வருகின்றனர். மேலும் இந்த பகுதிகளில் நடப்பாண்டில் தென்மேற்கு பருவமழை மற்றும் வடகிழக்கு பருவமழை பொய்த்து போனதால் முற்றிலும் விவசாய பயிர்கள் காய்ந்து மகசூல் பாதிப்பும் ஏற்பட்டுள்ளது.

சில ஆண்டுகளுக்கு முன்பு பருவமழையால் அதிக அளவில் பெய்ததால் மரவள்ளிக்கிழங்கு ஏக்கர் ஒன்றிக்கு சுமார் 10 டன் வரை மகசூல் கிடைத்தது. தற்போது பாலக்கோடு பகுதியில் கடும் வறட்சி நிலவி வருவதால் மகசூல் பாதிக்கப்பட்டு ஏக்கர் ஒன்றுக்கு 3 டன் முதல் 5 டன் வரை மட்டுமே மரவள்ளிக்கிழங்கு கிடைக்கிறது. மேலும் கடும் வறட்சி காரணமாக மரவள்ளிக்கிழங்கை அறுவடை செய்யாமல் நிலத்திலேயே காய்ந்து வருகிறது. இதனால் மரவள்ளிக்கிழங்கு சாகுபடி செய்த விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில், இந்தாண்டு பருவமழை பொய்த்து கடும் வறட்சி நிலவி வருகிறது. அறுவடைக்கு தயார் நிலையில் உள்ள மரவள்ளிக்கிழங்குக்கு டிராக்டர் மூலம் தண்ணீர் வாங்கி ஊற்றி அறுவடை செய்தாலும் ஆட்கள் கூலி, கிழங்கு குச்சி நடவு, உரம் வாங்கிய செலவுக்கு கூட கட்டுப்படி ஆகவில்லை. இதனால் மரவள்ளிக்கிழங்கை அறுவடை செய்யாமல் தோட்டத்திலேயே விட்டு விட்டோம். இதனால் மரவள்ளிக்கிழங்கு தோட்டத்தில் காய்ந்து கருகி வருகிறது.

கடும் வறட்சியால் தற்போது மரவள்ளிக்கிழங்கு டன் ஒன்று ரூ.3 ஆயிரத்தில் இருந்து ரூ.3,500 வரை விற்பனை ஆவதால் விவசாயிகள் கவலை அடைந்து உள்ளனர். எனவே தர்மபுரி மாவட்டத்தை வறட்சி பாதித்த மாவட்டமாக அறிவித்து போர்க்கால அடிப்படையில் மரவள்ளிக்கிழங்கு விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு தமிழக அரசு வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story