பல்கலைக்கழகங்களுக்கு இடையேயான மாநில அளவிலான பளு தூக்கும் போட்டி 75 மாணவ– மாணவிகள் பங்கேற்பு
பல்கலைக்கழகங்களுக்கு இடையேயான மாநில அளவிலான பளு தூக்கும் போட்டி வேலூரில் நேற்று தொடங்கியது. இதில் 75 மாணவ– மாணவிகள் பங்கேற்றனர்.
வேலூர்,
வேலூர் திருவள்ளுவர் பல்கலைக்கழகம் மற்றும் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் இணைந்து பல்கலைக்கழகங்களுக்கு இடையேயான மாநில அளவிலான பளு தூக்கும் போட்டியை வேலூரில் 2 நாட்கள் நடத்துகின்றன.
வேலூர் சத்துவாச்சாரியில் உள்ள பளுதூக்கும் பயிற்சி மையத்தில் நடைபெறும் இந்த போட்டியின் தொடக்க விழா நேற்று காலை நடந்தது. தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் முதுநிலை மேலாளர் கே.புகழேந்தி தலைமை தாங்கினார். திருவள்ளுவர் பல்கலைக்கழக பதிவாளர் வி.பெருவழுதி போட்டியை தொடங்கி வைத்தார்.
இந்த போட்டியில் தமிழ்நாட்டில் உள்ள பல்வேறு பல்கலைக்கழகங்களை சேர்ந்த மாணவ– மாணவிகள் பங்கேற்றுள்ளனர். ஆண்கள் பிரிவில் 50 பேர், பெண்கள் பிரிவில் 25 பேர் என மொத்தம் 75 பேர் போட்டியில் கலந்து கொண்டுள்ளனர்.
ஆண்களுக்கு 55, 61, 67, 73, 81, 89, 96 ஆகிய எடைப்பிரிவுகளிலும், பெண்களுக்கு 49, 55, 59, 64, 71, 76 ஆகிய எடைப்பிரிவுகளிலும் போட்டிகள் நடத்தப்படுகிறது. இதில் வெற்றி பெறுபவர்களுக்கு முதல் பரிசாக ரூ.10 ஆயிரம், 2–வது பரிசாக ரூ.7,500, 3–வது பரிசாக ரூ.5000 வழங்கப்படுகிறது.
நேற்று நடந்த தொடக்க விழாவில் திருவள்ளுவர் பல்கலைக்கழக உடற்கல்வி இயக்குனர் சையத்ஷபி மற்றும் ஜி.தங்கராஜ், டி.மரியஅந்தோணிராஜ், மாவட்ட விளையாட்டு அலுவலர் ரமேஷ் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.