அரக்கோணம் அருகே காலி குடங்களுடன் பொதுமக்கள் சாலை மறியல் போக்குவரத்து பாதிப்பு


அரக்கோணம் அருகே காலி குடங்களுடன் பொதுமக்கள் சாலை மறியல் போக்குவரத்து பாதிப்பு
x
தினத்தந்தி 30 Dec 2018 3:45 AM IST (Updated: 29 Dec 2018 8:18 PM IST)
t-max-icont-min-icon

அரக்கோணம் அருகே குடிநீர் சரியாக வழங்காததை கண்டித்து காலி குடங்களுடன் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

அரக்கோணம், 

அரக்கோணம் அருகே பரித்திப்புத்தூர் ஊராட்சிக்குட்பட்ட எம்.ஜி.ஆர். நகரில் 500–க்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். பொதுமக்களின் பயன்பாட்டிற்காக 30 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி உள்ளது. எம்.ஜி.ஆர். நகரில் கடந்த சில தினங்களாக குடிநீர் சரியாக வினியோகிக்கவில்லை. இதுகுறித்து அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் அதிகாரிகளிடம் தெரிவித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது.

இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் நேற்று அரக்கோணத்தில் இருந்து நெமிலி செல்லும் சாலையில் காலி குடங்களுடன் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர்.

பொதுமக்கள் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டதால் அரக்கோணம்–நெமிலி சாலையில் வாகனங்கள் வரிசையாக நின்றன.

இதுகுறித்து தகவல் அறிந்த நெமிலி வட்டார வளர்ச்சி அலுவலர் ரவி, அரக்கோணம் துணை போலீஸ் சூப்பிரண்டு எஸ்.கே.துரைப்பாண்டியன், இன்ஸ்பெக்டர்கள் முத்துராமலிங்கம், அமுதா மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள்.

அப்போது பொதுமக்கள் கூறுகையில், எங்கள் பகுதிக்கு கடந்த சில தினங்களாக குடிநீர் சரியாக வரவில்லை. இதனால் நாங்கள் குடிநீருக்காக நீண்ட தூரம் நடந்து சென்று குடிநீர் எடுத்து வர வேண்டிய நிலை இருந்து வருகிறது. அதிகாரிகளிடம் தகவல் தெரிவித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. ஆகவே எங்கள் பகுதிக்கு குடிநீர் தடையில்லாமல் கிடைக்க போர்க்கால நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

இதையடுத்து அதிகாரிகள் கூறுகையில், மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிக்கு குடிநீர் வரும் பகுதியில் குழாய் பழுது ஏற்பட்டு உள்ளது. அதை சரிசெய்ய தேவையான நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. விரைவில் சீரான குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றனர். அதன்பின்னர் பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

சாலை மறியல் காரணமாக அரக்கோணம்–நெமிலி சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.


Next Story