ரெயில் பயணிகள் ‘கியூ ஆர் கோடு’ மூலம் புகார் செய்யும் வசதி ரெயில்வே போலீசார் துண்டுபிரசுரம் வினியோகம்
ரெயில் பயணிகள் ‘கியூ ஆர் கோடு’ மூலம் புகார் செய்யும் வசதி குறித்த துண்டு பிரசுரங்களை காட்பாடி ரெயில் நிலையத்தில் ரெயில்வே போலீசார் வழங்கினர்.
காட்பாடி,
ரெயில் பயணிகள் தங்கள் செல்போனில் உள்ள ‘யூ.டி.எஸ். ஆப்’ மூலம் ‘கியூ ஆர் கோடு’ ஸ்கேன் செய்து அதன்மூலம் முன்பதிவில்லாத ரெயில் டிக்கெட் எடுக்கும் வசதி உள்ளது. தற்போது ‘கியூ ஆர் கோடு’ மூலம் பயணிகள் புகார் அளிக்கும் வசதி அறிமுகப் படுத்தப் பட்டுள்ளது.
இந்த திட்டம் மூலம் ரெயில் நிலையங்களில் உள்ள பொது தளத்தில் ‘கியூ ஆர் கோடு’ ஒட்டப்பட்டுள்ளது. இதனை ரெயில் பயணிகள் டவுன் லோடு செய்து வைத்து கொள்ள வேண்டும். ரெயில்வே போலீசாரை அணுகுவது குறித்த விவரங்கள் அதில் இடம் பெற்றுள்ளன.
இதன் மூலம் பயணிகள் அவசர உதவி பெறலாம். மேலும் திருட்டு உள்ளிட்ட குற்றங்கள் குறித்து புகார் அளிக்கலாம். ரெயில் பெட்டிகளில் சந்தேகப்படும் படியான பொருட்கள் கிடந்தால் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கலாம். போதையில் இருப்பவர்கள், ரகளை செய்பவர்கள் குறித்து புகார் அளிக்கலாம். ரெயில்வே ஊழியர்கள் பற்றிய கருத்துகளை தெரிவிக்கலாம்.
இந்த வசதி குறித்த துண்டு பிரசுரங்கள் அச்சிடப்பட்டுள்ளது. அதில் ‘கியூ ஆர் கோடு’ ஸ்கேன் இடம் பெற்றுள்ளது. காட்பாடி ரெயில் நிலையத்தில் நேற்று இந்த துண்டு பிரசுரங்களை பயணிகளுக்கு, போலீசார் வழங்கினர். மேலும் ‘கியூ ஆர் கோடு’ பதிவிறக்கம் செய்து பயன்படுத்துவது குறித்து பயணிகளுக்கு அவர்கள் விளக்கி கூறினர்.