திருவேற்காடு அருகே கன்டெய்னர் லாரி தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு


திருவேற்காடு அருகே கன்டெய்னர் லாரி தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு
x
தினத்தந்தி 30 Dec 2018 4:15 AM IST (Updated: 29 Dec 2018 10:06 PM IST)
t-max-icont-min-icon

திருவேற்காடு அருகே கன்டெய்னர் லாரி தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

பூந்தமல்லி,

ஸ்ரீபெரும்புதூரை அடுத்த ஒரகடத்தில் இருந்து செல்போன் கோபுரங்கள் அமைக்க பயன்படுத்தப்படும் உதிரிபாகங்களை ஏற்றிக்கொண்டு கன்டெய்னர் லாரி ஒன்று நேற்று முன்தினம் இரவு சென்னை நோக்கி வந்து கொண்டிருந்தது. பூந்தமல்லி நெடுஞ்சாலையில் திருவேற்காடு அடுத்த வேலப்பன்சாவடி அருகே சென்றபோது கன்டெய்னர் லாரியின் முன் பகுதியில் இருந்து திடீரென புகை வந்தது.

இதனால் அதிர்ச்சி அடைந்த டிரைவர், சாலையோரமாக கன்டெய்னர் லாரியை நிறுத்தினார். கீழே இறங்கி வந்து பார்ப்பதற்குள், புகை வந்த இடத்தில் தீப்பிடித்து எரியத்தொடங்கியது. தீ மளமளவென லாரி முழுவதும் பரவியது.

பயந்துபோன டிரைவர் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். அந்த வழியாக சென்ற வாகன ஓட்டிகள், கன்டெய்னர் லாரி தீப்பிடித்து எரிவதை கண்டு தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் கொடுத்தனர். பூந்தமல்லி, மதுரவாயல் ஆகிய 2 இடங்களில் இருந்து தீயணைப்பு வாகனங்களில் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் கன்டெய்னர் லாரியில் எரிந்த தீயை அணைத்தனர்.

தீ விபத்தில் கன்டெய்னர் லாரியின் முன்பகுதி முழுவதும் தீயில் எரிந்து நாசமானது. எனினும் கன்டெய்னரில் இருந்த செல்போன் கோபுர உதிரிபாகங்கள் சேதம் இன்றி தப்பியது. இதுகுறித்து திருவேற்காடு போலீசார் வழக்குப்பதிவு செய்து, கன்டெய்னர் லாரி தீப்பிடித்து எரிந்ததற்கான காரணம் குறித்து விசாரித்து வருகின்றனர். மேலும் தப்பி ஓடிய டிரைவரையும் தேடி வருகின்றனர்.

Next Story