உயர்மின் கோபுரம் அமைக்க எதிர்ப்பு: முகத்தில் கரியை பூசி விவசாயிகள் ஆர்ப்பாட்டம்
உயர்மின் கோபுரம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து ஈரோட்டில் விவசாயிகள் முகத்தில் கரியை பூசி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஈரோடு,
தமிழகத்தில் ஈரோடு, கோவை, நாமக்கல், திருப்பூர், சேலம், தர்மபுரி, திருவண்ணாமலை, வேலூர் உள்ளிட்ட 13 மாவட்டங்களில் விவசாய நிலங்களில் உயர்மின் கோபுரங்கள் அமைக்கும் பணி நடந்து வருகிறது. தமிழ்நாடு மின்தொடர் அமைப்பு கழகம் மற்றும் பவர் கிரிட் நிறுவனம் ஆகியவற்றின் சார்பில் இந்த பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
விவசாய நிலங்களில் உயர் மின் கோபுரங்கள் அமைக்கப்பட்டு உயர் அழுத்த மின்கம்பிகள் வழியாக மின்சாரம் வெளிமாநிலங்களுக்கு கொண்டு செல்ல இந்த பணிகள் நடக்கிறது. இதனால் ஏராளமான விவசாயிகள் தங்களது நிலங்களை இழக்கும் சூழ்நிலைக்கு தள்ளப்பட்டு உள்ளனர். விவசாய நிலங்களுக்கு பாதிப்பு இல்லாமல் சாலையோரங்கள் வழியாக புதைவட கேபிள்கள் மூலம் மின்சாரம் கொண்டு செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்து வருகிறார்கள்.
மேற்கண்ட இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி விவசாய சங்கங்களின் கூட்டியக்கம் சார்பில் பல்வேறு கட்ட போராட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன.
ஈரோடு, கோவை, திருப்பூர், நாமக்கல், சேலம், தர்மபுரி, திருவண்ணாமலை, வேலூர் ஆகிய 8 இடங்களில் கடந்த 17-ந்தேதியில் இருந்து போராட்டம் நடந்து வருகிறது. ஈரோடு மாவட்டத்தில் ஈரோடு அருகே உள்ள மூலக்கரை பகுதியில் விவசாயிகள் தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.
கடந்த 23-ந்தேதியில் இருந்து 6 பெண்கள் உள்பட 11 பேர் தொடர்ந்து உண்ணாவிரதம் இருந்து வந்தனர். இதையொட்டி ஒவ்வொரு நாளும் விவசாயிகள் பல்வேறு விதமான ஆர்ப்பாட்டத்திலும் ஈடுபட்டனர். அதன்படி உயர்மின் கோபுரத்தின் படம் வரைந்த உருவ பொம்மையை, பாடையில் கட்டி அதை சுற்றி பெண்கள் ஒப்பாரி வைக்கும் போராட்டம், ஆடு, மாடுகளுடன் ஆர்ப்பாட்டம், சங்கு ஊதி ஆர்ப்பாட்டம், வாயில் புற்களை வைத்துக்கொண்டு ஆர்ப்பாட்டம் என பல்வேறு விதமான ஆர்ப்பாட்டங்களும் நடந்தன. இதற்கிடையே கடந்த 27-ந்தேதி விவசாயிகளுக்கு ஆதரவாக மேட்டுக்கடை பகுதியில் உள்ள வியாபாரிகள் தங்களது கடைகளை அடைத்தனர். மேலும் அன்று பல்வேறு கட்சியினர் போராட்ட பந்தலில் அமர்ந்து விவசாயிகளுக்கு ஆதரவாக உண்ணாவிரதமும் இருந்தனர்.
கடந்த 23-ந்தேதியில் இருந்து உண்ணாவிரதம் இருந்த 11 பேரில் 27-ந்தேதி ஒரு பெண்ணுக்கும், நேற்று முன்தினம் 5 ஆண்கள், 5 பெண்கள் என 10 பேருக்கும் உடல்நலக்குறைவு ஏற்பட்டு மயங்கி விழுந்தனர். அவர்கள் ஈரோடு அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வீடு திரும்பினர்.
நேற்று முன்தினம் முதல் புதிதாக 8 பேர் உண்ணாவிரதம் இருந்து வருகிறார்கள். தொடர் காத்திருப்பு போராட்டத்தில் 500-க்கும் மேற்பட்ட விவசாயிகள் ஈடுபட்டு வந்தனர். நேற்று முன்தினம் முதல் போலீசாரின் கெடுபிடியால் போராட்டத்தில் ஈடுபடும் விவசாயிகளின் எண்ணிக்கை குறைந்துவிட்டது.
இந்த நிலையில் விவசாயிகளின் தொடர் காத்திருப்பு போராட்டம் நேற்று 13-வது நாளாக தொடர்ந்தது. இந்த போராட்டத்துக்கு ஒருங்கிணைப்பாளர் ராசு தலைமை தாங்கினார். கவின், முனுசாமி, சி.எம்.துளசிமணி, குணசேகரன், கொங்கு பூபதி ஆகியோர் முன்னிலை வகித்தார்கள். இதில் 100-க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டனர்.
மேலும் நேற்று விவசாயிகள் தங்களது முகத்தில் கரியை பூசி ஆர்ப்பாட்டத்திலும் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் விவசாய நிலங்களில் உயர் மின் கோபுரங்கள் அமைக்கக்கூடாது என்று கோஷங்கள் எழுப்பினார்கள்.
இதில் ஒருங்கிணைப்பாளர்கள் பழனிச்சாமி, பொன்னுச்சாமி, செந்தாமரை, கிருஷ்ணவேணி, நிர்மலா, சரோஜா உள்பட கவின், போராட்டக்குழு உறுப்பினர்கள் பழனிச்சாமி, கொங்கு பூபதி, சிவக்குமார், ராசு உள்பட பலர் கலந்து கொண்டார்கள்.
இதற்கிடையே உயர் மின் கோபுரங்கள் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து போராடி வரும் விவசாயிகளை தமிழக காங்கிரஸ் கட்சி முன்னாள் தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் மற்றும் அகில இந்திய காங்கிரஸ் கட்சி தேசிய செயலாளர் சஞ்சய்தத் ஆகியோர் நேரில் சந்தித்து ஆதரவு தெரிவித்து பேசினார்கள்.
அப்போது ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் பேசியதாவது:-
விவசாய விளை நிலங்கள் வழியாக உயர் மின் கோபுரங்கள் அமைக்க கூடாது என விவசாயிகள் பொறுமையாக அறவழியில் போராடி வருகின்றனர். ஆனால் அதற்கு தமிழக அரசு தற்போது வரை அசைந்து கொடுக்கவில்லை. பொறுமைக்கும் ஒரு எல்லை உண்டு.
போராடுபவர்கள் ரோட்டிற்கு வர மாட்டார்கள் என அவர்கள் நினைக்கிறார்கள். சாத்வீகமாக சொல்வதை காது கொடுத்து அவர்கள் கேட்கவில்லை என்றால், அரசுக்கு உரைக்கும் அளவிற்கு அடுத்த கட்ட போராட்டத்தில் விவசாயிகள் இறங்க நேரிடும்.
இவ்வாறு அவர் பேசினார்.
அகில இந்திய காங்கிரஸ் கட்சி தேசிய செயலாளர் சஞ்சய்தத் பேசுகையில், “மோடி அரசு விவசாயிகளுக்கு எதிராகவே செயல்படுகிறது. காங்கிரஸ் கட்சியும், அதனுடைய கூட்டணி கட்சிகளும் என்றைக்கும் விவசாயிகளின் பக்கம் துணை நிற்கும். நிச்சயமாக வருகின்ற காங்கிரஸ் ஆட்சியில் இதற்கு ஒரு நல்ல தீர்வு ஏற்படும்.” என்றார்.
Related Tags :
Next Story