மக்காச்சோளப் பயிரில் படைப்புழுவை கட்டுப்படுத்துவதற்கான வழிமுறைகள் கலெக்டர் சந்தீப் நந்தூரி தகவல்


மக்காச்சோளப் பயிரில் படைப்புழுவை கட்டுப்படுத்துவதற்கான வழிமுறைகள் கலெக்டர் சந்தீப் நந்தூரி தகவல்
x
தினத்தந்தி 29 Dec 2018 11:00 PM GMT (Updated: 29 Dec 2018 5:18 PM GMT)

தூத்துக்குடி மாவட்டத்தில் மக்காச்சோளப் பயிரில் படைப்புழுவை கட்டுப்படுத்துவதற்கான வழிமுறைகளை கலெக்டர் சந்தீப் நந்தூரி தெரிவித்து உள்ளார்.

தூத்துக்குடி, 

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறிஇருப்பதாவது;-

மக்காச்சோளப் பயிர்களில் படைப்புழு தாக்குதல் கர்நாடகம், ஆந்திரா, தெலுங்கானா மற்றும் தமிழ்நாடு ஆகிய மாநிலங்களில் கண்டறியப்பட்டு உள்ளது. தூத்துக்குடி மாவட்டத்தில் பயிரிடப்பட்டுள்ள மக்காச்சோளம் ஒட்டுரகம் மற்றும் இதர ரகங்களில் படைப்புழுவின் தாக்குதல் கண்டறியப்பட்டுள்ளது. குளிர்ச்சியான பருவ நிலையில், விட்டு விட்டு மழை பெய்யக்கூடிய காலங்களில் இந்த புழுவின் தாக்குதல் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது.இந்த புழு மக்காச்சோளப் பயிரில் 15 நாட்கள் முதல் வளரக்கூடிய குருத்துப் பகுதியில் சேதத்தை விளைவிக்கிறது. இந்த புழுக்கள் கதிர்களின் நுனி மற்றும் காம்புப் பகுதியினை உண்ணும் திறன் கொண்டது.

விவசாயிகள், ஆழமாக உழவு செய்வதன் மூலம் மண்ணில் உள்ள கூட்டுப்புழுக்கள் வெளிப்படும் போது, சூரிய ஒளி மற்றும் பறவைகளால் அவை அழிக்கப்படும். அவ்வாறு செய்வதால் அந்துப்பூச்சி உருவாதலை தடுக்க முடியும். உழவு செய்யும் போது ஒரு ஏக்கருக்கு 250 கிலோ வேப்பம் புண்ணாக்கு மண்ணில் இடுவதன் மூலம் கூட்டுப்புழுக்களைக் கட்டுப்படுத்தி அந்துப்பூச்சி வெளிவருவதை தடுக்க இயலும். ஒரு கிலோ மக்காச்சோள விதைக்கு 10 கிராம் நுண்ணுயிர் பூச்சிக்கொல்லியான பெவேரியா பேசியானா அல்லது 10 கிராம் இமிடாகுளோபிரிட் 70 டபிள்யு. எஸ். அல்லது 10 கிராம் தயோமீதாக்சம் 70 டபிள்யு.எஸ். விதை நேர்த்தி செய்ய வேண்டும். குறைவான பயிர் இடைவெளியால் பயிர்களுக்கிடையே படைப்புழு வேகமாக பரவ வாய்ப்பு உள்ளது. எனவே இறவை மக்காச்சோளத்திற்கு 60-க்கு 25 சென்டி மீட்டர் பயிர் இடைவெளியும், மானாவாரி மக்காச்சோளத்திற்கு 45-க்கு 20 சென்டி மீட்டர் பயிர் இடைவெளியும் கொண்டு பயிரிட வேண்டும். மக்காச்சோளப் பயிரில் கதிர் உருவாகும் பருவத்தில் படைப்புழுக்களை கட்டுப்படுத்த பூச்சிக்கொல்லி மருந்துகளை எளிதில் தெளிப்பதற்கு ஒவ்வொரு 10 வரிசை பயிருக்கும் 75 சென்டி மீட்டர் இடைவெளி விட வேண்டும்.

இயற்கை ஒட்டுண்ணி மற்றும் இரைவிழுங்கிகளை ஊக்குவிக்க குறுகிய கால பயிர்களான தட்டைப்பயறு, சூரியகாந்தி, எள், சோளம் மற்றும் சாமந்தி பயிர்களை வரப்பில் பயிரிட வேண்டும். மக்காச்சோளப் பயிரில் டெஸ்மோடின் தீவனப்பயிரை ஊடுபயிராக பயிரிட்டால் அந்துப்பூச்சிகள் தாக்குதலைத் தடுக்க இயலும். அந்துப்பூச்சிகளின் முட்டைக்குவியல்களை சேகரித்து அழிக்க வேண்டும். தொடர்ந்து மக்காச்சோளத்தை பயிர் செய்வதை தவிர்க்க வேண்டும். பயிர் சுழற்சி முறைகளை பின்பற்றுவதன் மூலம் படைப்புழு தாக்குதலை கட்டுப்படுத்த இயலும்.

படைப்புழு தாக்குதலை சீரிய முறையில் கட்டுப்படுத்த விவசாயிகள் வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் அலுவலகத்திற்கு நேரில் சென்று தெரிந்து கொள்ளலாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

Next Story