உளுந்தூர்பேட்டை அருகே வயிற்றில் கல்லை கட்டி கிணற்றில் குதித்து மூதாட்டி தற்கொலை


உளுந்தூர்பேட்டை அருகே வயிற்றில் கல்லை கட்டி கிணற்றில் குதித்து மூதாட்டி தற்கொலை
x
தினத்தந்தி 29 Dec 2018 11:32 PM IST (Updated: 29 Dec 2018 11:32 PM IST)
t-max-icont-min-icon

உளுந்தூர்பேட்டை அருகே வயிற்றில் கல்லை கட்டிக்கொண்டு கிணற்றில் குதித்து மூதாட்டி தற்கொலை செய்து கொண்டார்.

விழுப்புரம், 

உளுந்தூர்பேட்டை அருகே உள்ள வெள்ளையூர் கிராமத்தை சேர்ந்தவர் சின்னராசு. இவருடைய மனைவி சரசு (வயது 70). சின்னராசு கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார். இதனால் சரசு அதே பகுதியில் உள்ள தனது மகனுடன் வசித்து வந்தார். முதுமை காரணமாக அவர் அடிக்கடி நோய்வாய்பட்டிருந்தார். இதனால் இவர் விரக்தியில் இருந்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் நேற்று காலை சரசு, அதே பகுதியில் உள்ள விளை நிலத்துக்கு சென்றார். பின்னர் அவர் திடீரென தனது வயிற்றில் கல்லை கட்டிக்கொண்டு, அந்த விளை நிலத்தில் இருந்த கிணற்றில் குதித்தார். இதை பார்த்த அக்கம் பக்கத்தினர் விரைந்து வந்து கிணற்றுக்குள் குதித்து சரசுவை மீட்க முயன்றனர். ஆனால் அவர்களால் முடியவில்லை. இதற்கிடையே இதுபற்றி அறிந்த உளுந்தூர்பேட்டை தீயணைப்பு நிலைய அலுவலர் ஜமுனாராணி தலைமையிலான வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து, சரசுவை தேடும் பணியில் ஈடுபட்டனர். நீண்ட நேர போராட்டத்துக்கு பின்னர் சரசு பிணமாக மீட்கப்பட்டார்.

இதுபற்றி தகவல் அறிந்த உளுந்தூர்பேட்டை சப்-இன்ஸ்பெக்டர் செல்வநாயகம் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து, சரசுவின் உடலை பார்வையிட்டு அங்கிருந்தவர்களிடம் விசாரித்தனர். பின்னர் அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக உளுந்தூர்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்த புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து சரசு தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் குறித்து விசாரித்து வருகின்றனர்.

Next Story