பண்ணாரியில் புதிய சுங்கச்சாவடி சோதனை ஓட்டத்தை வன அதிகாரி தொடங்கி வைத்தார்
பண்ணாரியில் புதிய சுங்கச்சாவடி அமைக்கப்பட்டது. அதில் சோதனை ஓட்டத்தை மாவட்ட வன அதிகாரி தொடங்கிவைத்தார்.
சத்தியமங்கலம்,
சத்தியமங்கலம் அடுத்துள்ள திம்பம் மலைப்பாதையில் 27 கொண்டை ஊசி வளைவுகள் உள்ளன. ஈரோடு மாவட்டம் வழியாக கர்நாடக மாநிலம் செல்ல திம்பம் மலைப்பாதை எளிய வழி என்பதால், எப்போதும் கார், பஸ், லாரி என கனரக வாகனங்கள் சென்று வந்தபடி இருக்கும்.
திம்பம் அடிவாரத்தில் உள்ள பண்ணாரியில் போக்குவரத்து காவல் துறை, வனத்துறை, வருவாய்த்துறை சார்பில் சோதனை சாவடிகளும் உள்ளன.
அதிக பாரத்துடன் திம்பம் மலைப்பாதையில் வரும் லாரிகள் கொண்டை ஊசி வளைவுகளில் திரும்ப முடியாமல் அடிக்கடி பழுதாகி நின்றுவிடுகின்றன. இதனால் பல மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டு பயணிகள் பரிதவித்து வருகிறார்கள்.
இதை தடுக்க, அதிக உயரம் மற்றும் பாரத்துடன் வரும் லாரிகளை தடுப்பதற்காக பண்ணாரியில் இரும்பு தடுப்புகள் அமைக்கப்பட்டது. ஆனால் ஆசனூரில் தடுப்புகள் இல்லாததால் பண்ணாரி வரை வந்துவிட்ட கர்நாடக லாரிகளுக்காக அந்த தடுப்புகள் அகற்றப்பட்டது. மேலும் பண்ணாரியிலும், ஆசனூரிலும் ஒரே நேரத்தில் தடுப்புகள் அமைக்கப்பட்டு, வருகிற 1-ந் தேதி நடைமுறைக்கு வரும் என்று போக்குவரத்துத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்த நிலையில், புதிதாக பண்ணாரியில் வனத்துறை சார்பில் சுங்கச்சாவடி அமைக்கப்பட்டுள்ளது. சத்தியமங்கலம் வனப்பகுதி புலிகள் காப்பகமாக இருப்பதாலும், வனப்பகுதி வழியாக திண்டுக்கல்-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலை செல்வதாலும் சுங்கச்சாவடி அமைத்துள்ளதாக வன அதிகாரிகள் தெரிவித்தனர். இதற்கான சோதனை ஓட்டம் நேற்று காலை 10 மணிக்கு நடைபெற்றது. சத்தியமங்கலம் வன மாவட்ட அதிகாரி அருண்லால் சோதனை ஓட்டத்தை தொடங்கிவைத்தார்.
அப்போது வனச்சரகர் பெர்னாட்ஸ், வனவர் சிவக்குமார் ஆகியோர் உடன் இருந்தார்கள். ஆசனூரிலும் சுங்கச்சாவடி அமைக்கப்பட்ட பிறகு சுங்கச்சாவடி செயல்பாட்டுக்கு வரும் என்று வன மாவட்ட அதிகாரி அருண்லால் தெரிவித்தார்.
Related Tags :
Next Story