ரியல் எஸ்டேட் அதிபரை கடத்தி நகை, பணம் பறிப்பு: போலீஸ் ஏட்டு-வக்கீல் உள்பட 4 பேர் கைது 3 பேருக்கு வலைவீச்சு
ரியல் எஸ்டேட் அதிபரை கடத்தி நகை மற்றும் பணத்தை பறித்து சென்ற வழக்கில் போலீஸ் ஏட்டு உள்பட 4 பேரை போலீசார் கைது செய்தனர். இதுதொடர்பாக மேலும் 3 பேரை தேடி வருகிறார்கள்.
ஈரோடு,
திருப்பூர் மாவட்டத்தை சேர்ந்தவர் பாலசரவணன் (வயது 44). ரியல் எஸ்டேட் அதிபர். இடத்தை வாங்கி, விற்கும்போது இவருக்கும், ஒரு கும்பலுக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதனால் அந்த கும்பலை சேர்ந்தவர்கள் பாலசரவணனை சம்பவத்தன்று கடத்தி ஈரோடு திண்டலுக்கு கொண்டு வந்தனர்.
பின்னர் இங்கு வைத்து மிரட்டி அவரிடம் இருந்த 24 பவுன் நகை மற்றும் ரூ.25 லட்சத்தை பறித்து சென்றுவிட்டனர். இதைத்தொடர்ந்து பாலசரவணன் இதுபற்றி ஈரோடு தாலுகா போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
விசாரணையில் 7 பேர் கொண்ட கும்பல் பாலசரவணனிடம் பணம் மற்றும் நகையை பறித்து சென்றது தெரிய வந்தது. இதனால் அந்த கும்பலை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டது. இந்த தனிப்படையினர் பல்வேறு இடங்களில் அவர்களை தேடி வந்தனர்.
இந்த நிலையில் பாலசரவணனை மிரட்டி பணம் மற்றும் நகையை பறித்ததாக ஈரோடு வக்கீல் சிவக்குமார், திருப்பூர் மாவட்டத்தை சேர்ந்த ரியல் எஸ்டேட் அதிபர் சுந்தர், கோவை போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீஸ் ஏட்டு ஈஸ்வரன் (44), கோவையை சேர்ந்த ரியல் எஸ்டேட் புரோக்கர் அருண்ஜெபஸ்டின் ஆகிய 4 பேரை போலீசார் கைது செய்து ஈரோடு கிளை சிறையில் அடைத்தனர்.
மேலும் அவர்களிடம் இருந்து 24 பவுன் நகை மற்றும் ரூ.7 லட்சம் மீட்கப்பட்டு உள்ளது. இந்த வழக்கில் தொடர்புடைய மேலும் 3 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.
ரியல் எஸ்டேட் அதிபரை கடத்தி நகை மற்றும் பணத்தை பறித்து சென்ற போலீஸ் ஏட்டு உள்பட 4 பேர் கைது செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Related Tags :
Next Story