ராகுல்காந்தி-மு.க.ஸ்டாலின் கூடாரத்தை கலைப்போம் தமிழகத்தில் பா.ஜனதா கட்சி வலுவான கூட்டணி அமைக்கும் தமிழிசை சவுந்தரராஜன் பேட்டி


ராகுல்காந்தி-மு.க.ஸ்டாலின் கூடாரத்தை கலைப்போம் தமிழகத்தில் பா.ஜனதா கட்சி வலுவான கூட்டணி அமைக்கும் தமிழிசை சவுந்தரராஜன் பேட்டி
x
தினத்தந்தி 29 Dec 2018 11:00 PM GMT (Updated: 29 Dec 2018 6:52 PM GMT)

‘தமிழகத்தில் பா.ஜனதா கட்சி வலுவான கூட்டணியை அமைப்பதுடன் ராகுல்காந்தி-மு.க.ஸ்டாலின் கூடாரத்தை கலைப்போம்’ என்று சேலத்தில் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்தார்.

சேலம், 

சேலம் கோட்ட பா.ஜனதா கட்சி இளைஞர் அணி சார்பில், மாநில நிர்வாகிகள் மற்றும் மாவட்ட மண்டல தலைவர்கள் ஒருங்கிணைப்பு கூட்டம் சேலத்தில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் நேற்று நடந்தது. கூட்டத்துக்கு மாநில இளைஞரணி தலைவர் செல்வம் தலைமை தாங்கினார். இதில் சிறப்பு விருந்தினராக மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கலந்துகொண்டு பேசினார். அதைத்தொடர்ந்து அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது தமிழிசை சவுந்தரராஜன் கூறியதாவது:-

தமிழகத்தில் பா.ஜனதா கட்சி வலுப்பெற்று வருகிறது. 2019-ம் ஆண்டு தேர்தலுக்கு எங்களுடன் இளைஞர்களும், பெண்களும் தயாராகி வருகின்றனர். அவர்களுக்கு வாக்குச்சாவடி பொறுப்பு பகிர்ந்து கொடுக்கப்பட்டுள்ளது. முத்தலாக் சட்ட மசோதாவை எதிர்க்கும் எதிர்க்கட்சிகளுக்கு கண்டனம் தெரிவிக்கிறோம். இஸ்லாமிய பெண்களுக்கு சமஉரிமை வழங்கவே இந்த சட்ட மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளது.

பாலியல் வன்கொடுமையில் ஈடுபடுபவர்களுக்கு தூக்கு தண்டனை கொடுக்க வேண்டும் என்று அரசு முடிவு எடுத்துள்ளது வரவேற்கத்தக்கது. அதிலும் குழந்தைகளை பாலியல் வன்கொடுமை செய்பவர்களுக்கு மரண தண்டனை கொடுக்க வேண்டும் என்பதில் எந்த மாற்று கருத்தும் கிடையாது. மு.க.ஸ்டாலின் வெளிநாட்டு பிரதமர் என்று மோடியை குறை கூறி வருகிறார். மோடி ரூ.2 ஆயிரம் கோடி செலவில் 48 முறை வெளிநாடு சுற்றுப்பயணம் சென்று வந்துள்ளார்.

முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் ரூ.1,300 கோடி செலவில் 38 முறை வெளிநாடு சென்று உள்ளார். இதில் மோடியின் மூலம் 20 சதவீதம் அன்னிய முதலீடு அதிகரித்துள்ளது. இது சீனாவை விட அதிகமாகும். மத்திய அரசு தமிழகத்துக்கு நிதி உதவி தரவில்லை என்று கூறுவதை ஏற்று கொள்ள முடியாது. இதுவரை மத்திய அரசு தமிழகத்துக்கு ரூ.1 லட்சத்து 81 ஆயிரம் கோடி நிதி வழங்கி உள்ளது. காங்கிரஸ் ஆட்சியில் ரூ. 81 ஆயிரம் கோடி நிதி மட்டுமே வழங்கப்பட்டுள்ளது.

முத்ரா வங்கி மூலம் 1 கோடியே 89 லட்சம் பேர் கடன் வாங்கி பயன் அடைந்துள்ளனர். கஜா புயல் பாதிப்புக்காக மத்திய அரசின் பல்வேறு துறைகள் மூலம் நிதி வழங்கப்பட்டு வருகிறது. புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு குடிசை வீடுகளுக்கு பதிலாக கான்கிரீட் வீடு கட்டுவதற்காக பிரதமரின் வீடு கட்டும் திட்டம் மூலம் ரூ.6 ஆயிரத்து 300 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

பிரதமர் மோடி பொதுமக்களுக்கு கடிதம் எழுதியதை குறை கூற கூடாது. தமிழகத்தில் தி.மு.க.வை விட வலுவான கூட்டணியை அமைப்பதுடன், ராகுல்காந்தி-மு.க.ஸ்டாலின் கூடாரத்தை கலைப்போம். கூட்டணி குறித்து எந்தெந்த கட்சியுடன் பேச போகிறோம் என்பதை பின்னர் சொல்வோம். இவ்வாறு அவர் கூறினார்.

Next Story