ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் பங்கேற்பு மயிலாப்பூரை அதிர வைத்த ‘பறை’ முழக்கம் இயக்குனர் பா.ரஞ்சித் தொடங்கிவைத்தார்


ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் பங்கேற்பு மயிலாப்பூரை அதிர வைத்த ‘பறை’ முழக்கம் இயக்குனர் பா.ரஞ்சித் தொடங்கிவைத்தார்
x
தினத்தந்தி 30 Dec 2018 5:00 AM IST (Updated: 30 Dec 2018 12:41 AM IST)
t-max-icont-min-icon

ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்ற ‘பறை முழக்கம்’ மயிலாப்பூரை நேற்று அதிர செய்தது. சமூக விழிப்புணர்வுக்காக இயக்குனர் பா.ரஞ்சித் நடத்திய இந்த நிகழ்வு அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது.

சென்னை,

சமூக ஏற்றத்தாழ்வுகளை முற்றிலுமாக களைய வேண்டும், சாதி, இன வேறுபாடு கடந்து அன்பை பரப்ப வேண்டும் என்ற வகையில் திரைப்பட இயக்குனர் பா.ரஞ்சித் ஏற்பாட்டில் நீலம் பண்பாட்டு மையம் சார்பில் ஒவ்வொரு ஆண்டும் கலை இலக்கிய திருவிழா நடத்தப்பட்டு வருகிறது.

இந்த விழா மயிலாப்பூரில் நேற்று ‘வானம் கலை விழா’ என்ற பெயரில் தொடங்கியது. முதல் நாளான நேற்று பறை முழக்கம் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. இதைத்தொடர்ந்து சி.எஸ்.ஐ. செயின்ட் எப்பாஸ் மகளிர் மேல் நிலைப்பள்ளி வளாகத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட கிராமிய கலைஞர்கள் கலந்துகொண்டு ஒரே நேரத்தில் பறை அடித்தனர். பறை முழக்கம், மயிலாப்பூரை அதிர வைத்ததோடு, விண்ணையும் அதிர செய்யும் வகையில் இருந்தது.

குஜராத் மாநில வட்காம் தொகுதி எம்.எல்.ஏ. ஜிக்னேஷ் மேவானியும் இந்த நிகழ்வில் கலந்துகொண்டு, பறை அடித்து நடனம் ஆடினார். அவருடன் இயக்குனர் ரஞ்சித்தும் பறை அடித்து நடனம் ஆடினார். ஏராளமானவர்கள் இந்த பறை நிகழ்ச்சியை நேரில் கண்டு களித்தனர். ஜிக்னேஷ் மேவானி பேசும்போது, ‘இந்தியாவிற்கு எதிரான சக்தி சாதி தான். இதை தூக்கி எறியாமல் நம்மால் உண்மையான இந்தியாவை உருவாக்க முடியாது’ என்றார்.

அதனை தொடர்ந்து புத்தரின் பிறப்பு, புத்தரின் கொள்கை குறித்து விளக்கம் அளிக்கும் நிகழ்வு நடந்தது. மதுரை வீரன் கூத்து, பொம்மலாட்டம் நடந்தது. கிராமிய மனம் கமழும் வகையில் நடந்த இந்த நிகழ்வுகள் அனைவரையும் பரவசத்தில் ஆழ்த்தியது.

இது குறித்து திரைப்பட இயக்குனர் பா.ரஞ்சித் கூறியதாவது:- சமூகத்தில் நிலவும் ஏற்றத்தாழ்வு, பாலின வேறுபாடு, இன வேறுபாடு போன்றவற்றை களைந்து மக்களிடம் அன்பை விதைக்கும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் கலை இலக்கிய திருவிழாவை நடத்தி வருகிறோம்.

இந்த ஆண்டு கொஞ்சம் பெரிய அளவில் நடத்தி இருக்கிறோம். இதன்மூலம் சமூகத்தில் மாற்றத்தை கொண்டுவர வேண்டும் என்பதே எங்களின் நோக்கம். சாதியை ஒழிக்காமல் நம்மால் ஒன்றிணைய முடியாது. இந்தியா வல்லரசாக மாறிக்கொண்டிருக்கிற இந்த நேரத்தில் கூட, சாதிய ரீதியான மோதல்கள், வன்கொடுமைகள், மனித உறவுகளை சீர்குலைக்கும் நிகழ்வுகள் நடந்துகொண்டு தான் இருக்கிறது. முதலில் நாம் நமக்குள் ஏற்றத்தாழ்வுகள் இருப்பதை உணர வேண்டும். அதற்காக தான் இந்த நிகழ்ச்சி.

ஆயிரம் பேர் ஒன்றாக கூடி பறை அடித்து இருக்கிறார்கள். நாளை (இன்று) ஆணவக்கொலை சம்பந்தமான விழிப்புணர்வு நடனம் நடக்க இருக்கிறது. இரவு 7.30 மணி முதல் இரவு 10 மணி வரை இந்த நடன நிகழ்ச்சி நடக்கிறது. இதில் நடன பயிற்சியாளர்கள் ஷேண்டி, லோகன், வீராலி ஆகியோர் பங்கேற்கிறார்கள். அதற்கு முன்னதாக மாலை 6 மணிக்கு சிலம்பம் நிகழ்ச்சி நடக்க இருக்கிறது. காலையில் குழந்தைகளுக்கான விழிப்புணர்வு கருத்தரங்கிற்கு ஏற்பாடு செய்து இருக்கிறோம். 31-ந்தேதி (நாளை) திருக்குறள் குறித்த ஆய்வரங்கம், பறை ஒப்பாரி நிகழ்ச்சியை நடத்த இருக்கிறோம். ரூட்ஸ் நடன பாடல் நிகழ்ச்சியும், இசையமைப்பாளர் தென்மாவின் கைவண்ணத்தில் மகிழ்ச்சி ஆல்பத்தையும் வெளியிட உள்ளோம்.

இதுபோன்ற நிகழ்வுகளை பார்க்க வருபவர்களுக்கு மாற்றம் ஏற்பட்டால், அது சமுதாயத்தின் மாற்றமாக இருக்கும். வரும் புத்தாண்டு எல்லோருடைய மனதிலும் மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என்பதே கலை இலக்கிய விழாவின் நோக்கம். இது தான் எங்களின் விருப்பம். இவ்வாறு அவர் கூறினார்.

Next Story