நாமக்கல் அருகே ஜல்லிக்கட்டுக்கு தயாராகும் காளைகள் பயிற்சி அளிப்பதில் இளைஞர்கள் ஆர்வம்
நாமக்கல் அருகே பொங்கல் பண்டிகையை முன்னிட்டு நடத்தப்படும் ஜல்லிக்கட்டுக்காக காளைகளுக்கு தற்போதே இளைஞர்கள் ஆர்வத்துடன் பயிற்சி அளித்து வருகின்றனர்.
நாமக்கல்,
மதுரை மாவட்டம், அலங்காநல்லூர், பாலமேடு என ஜல்லிக்கட்டுக்கு பிரசித்தி பெற்ற ஊர்கள் இருந்தாலும், தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜல்லிக்கட்டு நடத்தப்படுவது வழக்கம்.
அந்த வகையில் தமிழர்களின் பாரம்பரியமான ஜல்லிக்கட்டு, நாமக்கல் மாவட்டம் அலங்காநத்தம் கிராமத்திலும் மாவட்ட நிர்வாகத்தின் அனுமதியோடு நடத்தப்பட்டு வருகிறது.
இந்த ஆண்டும் ஜல்லிக்கட்டை நடத்த அப்பகுதி இளைஞர்கள் அரசிடம் கோரிக்கை விடுத்துள்ளனர். அலங்காநத்தம், எருமப்பட்டி, பொட்டிரெட்டிப்பட்டி என நாமக்கல் மற்றும் சுற்றுவட்டார கிராமங்களில் ஜல்லிக்கட்டு என்கிற வீர விளையாட்டுக்காக நூற்றுக்கும் மேற்பட்ட காளைகளை அப்பகுதி மக்கள் வளர்த்து வருகின்றனர்.
இதற்கிடையே பொங்கல் பண்டிகைக்கு இன்னும் சில வாரங்களே உள்ளதால் ஜல்லிக்கட்டு காளைகளுக்கு பயிற்சி அளிப்பதில் அந்தந்த பகுதி இளைஞர்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர். இந்த பயிற்சியின் போது ஜல்லிக்கட்டு காளைகள் துள்ளி குதிப்பதையும், சீறிப்பாய்வதையும் காண முடிகிறது. இளைஞர்கள் எதற்கும் பயப்படாமல் காளைகளுக்கு தீவிரமாக பயிற்சி அளித்து வருகின்றனர்.
இது குறித்து காளைகளுக்கு பயிற்சி அளிக்கும் இளைஞர்கள் கூறியதாவது:-
இத்தகைய பயிற்சிகள் ஜல்லிக்கட்டில் மாடுபிடி வீரர்களின் பிடியில் சிக்காமல் தப்பிச்செல்ல ஜல்லிக்கட்டு காளைகளுக்கு உதவும். அதேபோல் எங்களுக்கும் ஜல்லிக் கட்டில் கலந்து கொள்ளும் காளைகளை பிடிக்க வேண்டிய முறை குறித்து அறிந்து கொள்ள உதவும்.
ஜல்லிக்கட்டில் கலந்து கொள்ளும் காளைகளை அலங்கரிக்க அரசு அனுமதி தருவதில்லை. குறைந்த பட்சம் காளைக்கு மாலை அணிவிக்க அரசு அனுமதி தர வேண்டும். பொங்கல் பண்டிகை முடிந்து சில நாட்களில் ஜல்லிக்கட்டு நடத்த மாவட்ட நிர்வாகம் அனுமதி வழங்கி வருகிறது. அதற்கு பதிலாக பொங்கல் பண்டிகைக்கு அடுத்து வரும் கரிநாளன்று ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி தர வேண்டும். அவ்வாறு நடத்தப்பட்டால் பண்டிகையை முன்னிட்டு எங்கள் ஊருக்கு வரும் உறவினர்களும் அதை காண முடியும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
Related Tags :
Next Story