கொடைக்கானல் அருகே பயங்கரம்: கியாஸ் சிலிண்டர் வெடித்து தி.மு.க. பிரமுகர் குடும்பத்துடன் பலி


கொடைக்கானல் அருகே பயங்கரம்: கியாஸ் சிலிண்டர் வெடித்து தி.மு.க. பிரமுகர் குடும்பத்துடன் பலி
x
தினத்தந்தி 30 Dec 2018 5:00 AM IST (Updated: 30 Dec 2018 1:07 AM IST)
t-max-icont-min-icon

கொடைக்கானல் அருகே கியாஸ் சிலிண்டர் வெடித்ததில் தி.மு.க. பிரமுகர் குடும்பத்துடன் உடல் கருகி பலியானார். அரையாண்டு விடுமுறையில் சொந்த ஊருக்கு வந்தபோது இந்த பரிதாப சம்பவம் நடந்தது.

பெரும்பாறை, 


திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் தாலுகா பெரும்பாறையை அடுத்துள்ள மங்களம்கொம்பு கிராமத்தை சேர்ந்தவர் கணேசன் (வயது 50). தி.மு.க. பிரமுகரான இவர், காமனூர் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் ஆவார். அவருடைய மனைவி மஞ்சுளாதேவி (45). இவர்களுடைய மகள் விஷ்ணுபிரியா (10).

இவள், திண்டுக்கல்லை அடுத்துள்ள சின்னாளபட்டியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் 4-ம் வகுப்பு படித்து வந்தாள். இதற்காக கணேசன் குடும்பத்துடன் சின்னாளபட்டியில் வந்து குடியேறினார். வாரந்தோறும் கணேசன் மட்டும் சொந்த ஊரான மங்களம்கொம்புக்கு சென்று வந்தார்.

தற்போது அரையாண்டு தேர்வு முடிந்து பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது. இதனால் கணேசன் தனது மனைவி குழந்தையுடன் சொந்த ஊரான மங்களம்கொம்புக்கு வந்திருந்தார். மங்களம்கொம்பு கிராமம் வனப்பகுதியையொட்டி உள்ளதால், பெரும்பாலான வீடுகள் தகர ஷீட்டுகளால் அமைக்கப்பட்டுள்ளன. இதே போன்று கணேசனின் வீட்டின் மேற்கூரையும் தகர ஷீட்டுகளால் அமைக்கப்பட்டு இருந்தது.

நேற்று முன்தினம் இரவு கணேசன் தனது குடும்பத்தினருடன் தூங்கினார். நேற்று அதிகாலை நேரத்தில் அவரது வீட்டில் இருந்து வெடி வெடித்ததுபோல் பயங்கர சத்தம் கேட்டது. மேலும் கணேசனின் வீட்டுக்குள் இருந்து கரும்புகையும் வெளியேறியது. அத்துடன் வீடு தீப்பிடித்து எரிந்ததால் அப்பகுதியே புகைமண்டலமாக காட்சியளித்தது.

இதையடுத்து அக்கம்பக்கத்தினர் அங்கு திரண்டு வந்து தண்ணீரை ஊற்றி தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். நீண்ட நேர போராட்டத்துக்கு பிறகு தீயை அணைத்தனர். ஆனால் தீயில் சிக்கிய கணேசன், அவரது மனைவி, மகள் 3 பேரும் எரிந்து கரிக்கட்டையாக கிடந்தனர். மேலும் வீட்டின் பெரும்பகுதி எரிந்து நாசமானது.

இது குறித்து அப்பகுதி மக்கள் தாண்டிக்குடி போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் முருகன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பார்வையிட்டனர். பின்னர் பலியான கணேசன் உள்பட 3 பேரின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தீயில் கருகி மனைவி, மகளுடன் தி.மு.க. பிரமுகர் பலியான சம்பவம் கொடைக்கானல் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. இதற்கிடையே தகவல் அறிந்ததும் போலீஸ் சூப்பிரண்டு சக்திவேல், போலீஸ் துணை சூப்பிரண்டு பொன்னுச்சாமி ஆகியோரும் சம்பவ இடத்தை பார்வையிட்டு விசாரணை நடத்தினர்.

Next Story