வீரபாண்டி அருகே மோட்டார் சைக்கிள்-லாரி மோதியதில் ஊர்க்காவல்படை வீரர்கள் 2 பேர் சாவு


வீரபாண்டி அருகே மோட்டார் சைக்கிள்-லாரி மோதியதில் ஊர்க்காவல்படை வீரர்கள் 2 பேர் சாவு
x
தினத்தந்தி 30 Dec 2018 3:45 AM IST (Updated: 30 Dec 2018 1:07 AM IST)
t-max-icont-min-icon

வீரபாண்டி அருகே மோட்டார்சைக்கிள்-டிப்பர் லாரி நேருக்குநேர் மோதியதில் ஊர்க்காவல்படை வீரர்கள் 2 பேர் பரிதாபமாக இறந்தனர்.

உப்புக்கோட்டை,

தேனி மாவட்டம் போடி அருகே உள்ள சில்லமரத்துப்பட்டி திரு.வி.க. தெருவை சேர்ந்தவர் செல்வக்குமார் (வயது 30). இவருக்கு திருமணமாகி ஒரு பெண் குழந்தை உள்ளது. கம்பம் பார்க்ரோடு தெருவை சேர்ந்தவர் சேது (29). திருமணம் ஆனவர். இவர்கள் இருவரும் உத்தமபாளையத்தில் ஊர்க்காவல்படை வீரர்களாக பணிபுரிந்து வந்தனர். மேலும் அவர்கள் நெருங்கிய நண்பர்களாக இருந்தனர்.

நேற்று இவர்கள் 2 பேரும் தேனிக்கு சென்றுவிட்டு மோட்டார்சைக்கிளில் உத்தமபாளையத்தில் உள்ள ஊர்க்காவல்படை அலுவலகத்துக்கு மோட்டார் சைக்கிளில் திரும்பி வந்து கொண்டு இருந்தனர். மோட்டார்சைக்கிளை செல்வக்குமார் ஓட்டினார். பின்னால் சேது அமர்ந்து இருந்தார்.

வீரபாண்டி அருகே கோட்டூரில் உள்ள பெட்ரோல் விற்பனை நிலையம் அருகே சென்றபோது அந்த வழியாக வந்த டிப்பர்லாரியும், மோட்டார் சைக்கிளும் நேருக்குநேர் மோதியது. இதில் இருவரும் தூக்கிவீசப்பட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.

இதுபற்றி தகவல் அறிந்ததும் வீரபாண்டி போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். பின்னர் அவர்கள் இறந்த செல்வக்குமார், சேது ஆகியோரின் உடல்களை கைப்பற்றி தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பிவைத்தனர். மேலும் விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி டிப்பர் லாரி டிரைவரான அனுமந்தனம்பட்டி அம்பலக் கார தெருவை சேர்ந்த நாகபிரபு (25) என்பவரை கைது செய்தனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. 

Next Story