திருச்செந்தூர் சிவந்தி ஆதித்தனார் பொறியியல் கல்லூரியில் மாணவ-மாணவிகளுக்கு தொழில் தொடங்குவது குறித்த விழிப்புணர்வு முகாம் பிப்ரவரி மாதம் 3 நாட்கள் நடக்கிறது
திருச்செந்தூர் டாக்டர் சிவந்தி ஆதித்தனார் பொறியியல் கல்லூரியில் மாணவ-மாணவிகளுக்கு தொழில் தொடங்குவது குறித்த விழிப்புணர்வு முகாம் பிப்ரவரி மாதம் 3 நாட்கள் நடக்கிறது.
திருச்செந்தூர்,
திருச்செந்தூர் டாக்டர் சிவந்தி ஆதித்தனார் பொறியியல் கல்லூரி மேலாண்மை துறையின் சார்பில் சொந்த தொழில் தொடங்குவது எப்படி? என்பதை விளக்கும் கல்லூரி மாணவ, மாணவிகளுக்கான விழிப்புணர்வு முகாம் வருகிற பிப்ரவரி மாதம் 3 நாட்கள் புதுடெல்லி அறிவியல் தொழில்நுட்ப கழகத்தின் உதவியுடன் நடைபெற உள்ளது.
இந்த முகாம் தொடர்ந்து ஒன்பதாவது முறையாக இந்த ஆண்டும் கல்லூரி வளாகத்தில் நடைபெறுகிறது. கல்லூரியில் படிக்கும்போதே வேலைக்கு சேர்வதைவிட தொழில் தொடங்க வேண்டும் என்னும் ஆர்வத்தை மாணவ, மாணவிகளிடம் ஏற்படுத்தும் வகையில் தொழில்முனைவு விழிப்புணர்வு முகாம் நடத்தப்படுகிறது. இந்த முகாமில் தொழில் தொடங்குவதற்கு தேவையான பண்புகள், தொழில்வாய்ப்புகள், தொழில் தொடங்க உதவும் அமைப்புகள், தொழில் நிறுவனங்கள், வங்கி திட்டம், தகவல் தொடர்பை வளர்க்கும் முறைகள் பற்றி கலந்துரையாடல் மற்றும் சிறப்பு சொற்பொழிவு நடைபெறும்.
டாக்டர் சிவந்தி ஆதித்தனார் பொறியியல் கல்லூரி வளாகத்தில் அமைந்துள்ள மேலாண்மைத்துறை கருத்தரங்க கூடத்தில் இந்த முகாம் வருகிற பிப்ரவரி மாதம் 13, 14 மற்றும் 15-ந்தேதிகளில் நடைபெற உள்ளது.
இந்த முகாமில் மாவட்ட தொழில் மையம், தொழில் முதலீட்டு கழகம், குறு,சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள், வங்கிகளின் உயர் அதிகாரிகள் கலந்துகொண்டு வழிகாட்ட இருக்கிறார்கள். மொத்தம் 75 மாணவ, மாணவிகள் மட்டும் கலந்து கொள்ள அனுமதிக்கப்படுவார்கள்.
பொறியியல் மற்றும் தொழில்நுட்ப கல்லூரிகளிலும், கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளிலும் பயிலும் இறுதி ஆண்டு மாணவ, மாணவிகள் இந்த முகாமில் கலந்து கொள்ளலாம். அனைத்து கல்லூரிகளுக்கும் வாய்ப்பு அளிக்கும் நோக்கில் ஒரு கல்லூரிக்கு 5 மாணவ, மாணவிகளுக்கு மட்டுமே வாய்ப்பு அளிக்கப்படும்.
டாக்டர் சிவந்தி ஆதித்தனார் பொறியியல் கல்லூரியின் மேலாண்மை துறையின் சார்பில் நடத்தப்படும் இந்த விழிப்புணர்வு முகாம் என்.எஸ்.டி.இ.டி.பி. (மத்திய அரசின் நேஷனல் சயின்ஸ் அன்ட் டெக்னாலஜி ஆன்டர்பர்னஷிப் டெவலப்மென்ட் போர்டு) என்னும் அமைப்பில் இருந்து நிதி பெற்று இம்முகாமை நடத்துகிறது.
முகாமின் அமைப்பாளராக மேலாண்மை துறை தலைவர் இரா.தமிழரசன் செயல்படுகிறார். கல்லூரி முதல்வர் ஜி.வைஸ்லின் ஜிஜி வழிகாட்டுதலுடன் மேலாண்மை துறை பேராசிரியர்கள் முகாம் ஏற்பாடுகளை செய்து வருகிறார்கள்.
இந்த முகாமில் பங்கு பெற விரும்புபவர்கள், ‘இரா.தமிழரசன், மேலாண்மை துறை தலைவர், டாக்டர் சிவந்தி ஆதித்தனார் பொறியியல் கல்லூரி, திருச்செந்தூர் - 628 215’ என்ற முகவரியில் தொடர்பு கொள்ளலாம். மேலும் 04639-242482 என்ற எண்ணில் தொடர்பு கொண்டும் வருகையை உறுதி செய்யலாம்.
Related Tags :
Next Story