வேப்பூர் அருகே விபத்து: 2 லாரிகள் மோதி தீ பற்றி எரிந்தது - தீக்காயங்களுடன் தப்பிய டிரைவர்களுக்கு சிகிச்சை


வேப்பூர் அருகே விபத்து: 2 லாரிகள் மோதி தீ பற்றி எரிந்தது - தீக்காயங்களுடன் தப்பிய டிரைவர்களுக்கு சிகிச்சை
x
தினத்தந்தி 30 Dec 2018 3:45 AM IST (Updated: 30 Dec 2018 1:46 AM IST)
t-max-icont-min-icon

வேப்பூர் அருகே 2 லாரிகள் மோதி தீ பற்றி எரிந்தது. இதில் தீக்காயங்களுடன் உயிர் தப்பிய டிரைவர்களுக்கு மருத்துவமனையில் உரிய சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

வேப்பூர், 

சென்னை மதுராந்தங்கத்தில் உள்ள டாஸ்மாக் குடோனில் இருந்து 20 ஆயிரம் பீர் பாட்டில்களை ஏற்றிக்கொண்டு லாரி ஒன்று திருச்சி நோக்கி சென்றது. இதை விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தை சேர்ந்த முருகேசன் மகன் ராமதாஸ்(வயது 31) என்பவர் ஓட்டினார்.

இதேபோல், திருச்சியில் இருந்து எம்.சாண்ட் மணல் ஏற்றிக்கொண்டு ஆந்திரா நோக்கி மற்றொரு லாரி சென்றது. இதை திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே உள்ள மேட்டுப்பட்டி கிராமத்தை சேர்ந்த செல்லையா மகன் செல்வமணி(23) என்பவர் ஓட்டி வந்தார்.

இந்த இரு லாரிகளும், நேற்று அதிகாலை 5.30 மணிக்கு வேப்பூர் அருகே உள்ள கழுதூர் என்கிற இடத்தில் நான்கு வழிச்சாலையில் வந்து கொண்டிருந்தன. அப்போது திருச்சி- சென்னை மார்க்கத்தில் செல்வமணி ஓட்டி சென்ற லாரி, திடீரென அவரது கட்டுப்பாட்டை இழந்து சாலையில் தாறுமாறாக ஓடியுள்ளது.

மேலும் சாலையின் நடுவில் இருந்த தடுப்பு சுவரின் மீது ஏறி, மறுபுறத்தில் சென்னை-திருச்சி சாலையில் ராமதாஸ் ஓட்டி வந்த லாரியின் மீது பயங்கரமாக மோதியது. அப்போது லாரியின் பக்கவாட்டில் டீசல் டேங்க் அமைந்திருக்கும் பகுதியில் லாரி மோதியதால், குபீரென தீப்பற்றியது. இதில் 2 லாரிகள் மீதும் தீ பற்றி எரிய தொடங்கியது. இதனால் அதன் டிரைவர்கள் லாரியில் இருந்து வெளியே குதித்து தீக்காயங்களுடன் உயிர் தப்பினார்கள்.

ராமதாஸ் ஓட்டி வந்த லாரியில் அட்டைபெட்டிகளில் பீர் பாட்டில்கள் இருந்ததால் அவை முழுவதும் தீ பற்றி கொளுந்து விட்டு எரிந்தது. இதனால் நான்கு வழிச்சாலையில் போக்குவரத்து முற்றிலும் பாதிக்கப்பட்டது. தகவல் அறிந்த வேப்பூர் தீயணைப்பு வீரர்கள் நிலைய அதிகாரி சதாசிவம் தலைமையில் விரைந்து சென்று, தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைத்தனர். சுமார் ஒரு மணி நேரம் போராட்டத்திற்கு பின்னரே தீயை கட்டுக்குள் கொண்டு வர முடிந்தது.

இதற்கிடையே சம்பவ இடத்திற்கு வேப்பூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பாஸ்கர் தலைமையிலான போலீசார் விரைந்து வந்து, விசாரணை நடத்தினர். மேலும் அந்த பகுதியில் போக்குவரத்தை ஒழுங்குபடுத்தி, ஒரு வழிப்பாதையில் மட்டும் வாகனங்கள் செல்ல ஏற்பாடு செய்தனர். இதனால் அந்த பகுதியில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

தொடர்ந்து சென்னை- திருச்சி மார்க்கத்தில் எரிந்த நிலையில் கிடந்த லாரிகள் பொக்லைன் எந்திரம் மூலம் அங்கிருந்து அப்புறப்படுத்தப்பட்டு, காலை 7.30 மணிக்கு பிறகு மீண்டும் அந்த பகுதியில் வழக்கம் போல் போக்குவரத்து தொடங்கியது.

இந்த விபத்தில் காயமடைந்த லாரி டிரைவர்கள் செல்வமணி, ராமதாஸ் ஆகியோரை அங்கிருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு இருவருக்கும் உரிய சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில், செல்வமணி மட்டும் மேல்சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். இருவருக்கும் டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகிறார்கள். இதுகுறித்து வேப்பூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். இந்தசம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. 

Next Story