தமிழக சுகாதாரத்துறை அமைச்சர், அதிகாரிகள் பதவி விலக வேண்டும்
பெண்ணுக்கு எச்.ஐ.வி. கிருமி ரத்தம் செலுத்திய விவகாரத்தில் தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மற்றும் சுகாதாரத்துறை அதிகாரிகள் பதவி விலக வேண்டும் என்று டாக்டர் அன்புமணி ராமதாஸ் கூறினார்.
கோவை,
பாட்டாளி மக்கள் கட்சியின் தலைமை செயற்குழு கூட்டம் கோவை வரதராஜபுரத்தில் உள்ள சாய் திருமண மண்டபத்தில் நேற்று நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட பா.ம.க. இளைஞர் அணி தலை வர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் எம்.பி, நிருபர்களிடம் கூறியதாவது:-
சென்னை மற்றும் சாத்தூரைச் சேர்ந்த 2 பெண்களுக்கு எச்.ஐ.வி. கிருமி ரத்தம் செலுத்தப்பட்ட விவாகரத்தில் தமிழக சுகாதாரத்துறை சரியாக செயல்படவில்லை. இதற்கு சுகாதாரத்துறை அமைச்சர் மற்றும் அதிகாரிகள் பொறுப்பேற்று பதவி விலக வேண்டும். எச்.ஐ.வி. கிருமி ரத்தம் அப்பாவி பெண்களுக்கு செலுத்தப்பட்டது மிகப்பெரிய தவறு என்று ஒரு மருத்துவராக நான் கூறிக்கொள்கிறேன். இந்த தவறை ஏற்றுக்கொள்ள முடியாது.
நெய்வேலி நிலக்கரி சுரங்க விரிவாக்கத்திற்கு 12 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலத்தை கையகப்படுத் துவதற்கு தடை விதிக்க வேண்டும்.
விவசாய நிலங்களில் உயர்மின் கோபுரங்களை அமைக்க கூடாது என்று விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகிறார்கள். ஆனால் விவசாயிகளை அரசு ஏளனமாக பார்க்கிறது. குறைந்தபட்சம் பேச்சுவார்த்தையாவது நடத்த வேண்டும். அதேபோல் இடைநிலை ஆசிரியர்கள் போராட்டத்தின் நியாயமான கோரிக்கைகளை ஏற்று ஊதியத்தை உயர்த்தி கொடுக்க வேண்டும்.
ஸ்டெர்லைட் ஆலை நிர்வாகம் சட்டத்தை மதிக்காமல் செயல்பட்டது. தமிழக அரசு அந்த தொழிற்சாலைக்கு சாதகமாக செயல்படுகிறது. நெடுஞ்சாலை பகுதிகளில் டாஸ்மாக் கடை இருக்க கூடாது என்று நாங்கள் போராடினோம். சுப்ரீம் கோர்ட்டும் உத்தரவிட்டது. உடனடியாக மூத்த வக்கீல் களை கொண்டு சுப்ரீம் கோர்ட்டில் வாதிட்ட தமிழக அரசு, ஸ்டெர்லைட் விவகாரத்தில் அப்படி வாதிட வில்லை.
வருகிற 2-ந்தேதி சட்டமன்றம் கூட இருப்பதால் காவிரி டெல்டாவை பாதுகாக்கப்பட்ட பகுதியாக ஒரு சட்டம் இயற்றி ஜனாதிபதியிடம் ஒப்புதல் பெற வேண்டும். கஜா புயலில் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு இன்னும் முழுமையாக நிவாரணம் கிடைக்கவில்லை. மத்திய அரசு அணைகள் பாதுகாப்பு சட்டத்தால் நமக்கு பாதகங்கள் தான் அதிகம். ரஜினிகாந்த், கமல்ஹாசன் ஆகியோர் தீவிர அரசியலுக்கு வந்தால் அது குறித்து பின்னர் பார்க்கலாம்.
இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story