புயலால் பாதிக்கப்பட்ட தமிழக மக்கள் மீது மத்திய அரசுக்கு அக்கறை இல்லை - சீமான் கண்டனம்


புயலால் பாதிக்கப்பட்ட தமிழக மக்கள் மீது மத்திய அரசுக்கு அக்கறை இல்லை - சீமான் கண்டனம்
x
தினத்தந்தி 29 Dec 2018 11:15 PM GMT (Updated: 29 Dec 2018 10:01 PM GMT)

புயலால் பாதிக்கப்பட்ட தமிழக மக்கள் மீது மத்திய அரசுக்கு அக்கறை இல்லை என்று சீமான் கண்டனம் தெரிவித்து உள்ளார்.

நாகப்பட்டினம்,

நாகை புதிய பஸ் நிலையம் அருகே அவுரித்திடலில் நாம் தமிழர் கட்சி மற்றும் தமிழ்த்தேசிய பேரியக்கம் சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உரிய நிவாரணம் வழங்காத மத்திய, மாநில அரசுகளை கண்டித்து நடந்த இந்த ஆர்ப்பாட்டத்திற்கு தமிழ்த்தேசிய பேரியக்க தலைவர் மணியரசன் தலைமை தாங்கினார். நாகை தெற்கு மாவட்ட தலைவர் ராசேந்திரன், செயலாளர் கட்டப்பிள்ளை அப்பு, நாகை மண்டல செயலாளர் கலியபெருமாள் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இதில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கலந்து கொண்டு பேசினார்.

பின்னர் சீமான், நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

கஜா புயலால் தஞ்சை, நாகை, திருவாரூர், புதுக்கோட்டை ஆகிய 4 மாவட்டங்களும் கடுமையாக பாதிக்கப்பட்டு முற்றிலும் வாழ்வாதாரங்களை இழந்து மக்கள் தவிக்கின்றனர். புயலால் பாதிக்கப்பட்ட தமிழக மக்கள் மீது மத்திய அரசுக்கு அக்கறை இல்லை. பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவாத மத்திய அரசு, ரூ.3 ஆயிரம் கோடி செலவில் சர்தார் வல்லபாய் படேலுக்கு சிலை வைத்துள்ளது.

ஒரு நடிகையின் திருமண விழாவில் பங்கேற்று நேரில் சந்தித்து வாழ்த்து சொல்ல நேரம் ஒதுக்கும் பிரதமர் மோடிக்கு புயலால் பாதிக்கப்பட்ட மக்களை வந்து பார்க்க நேரம் இல்லையா?.

இந்தியாவின் பொருளாதார வளர்ச்சிக்கு 4 மாநிலங்கள் தான் முதன்மையாக பங்கு வகிக்கின்றன. இதில் தமிழகம் 2-வது இடத்தில் உள்ளது. தமிழக அரசு, மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுத்து உரிய தொகையை பெற்று பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும். பொதுமக்கள் நிவாரண தொகையை பெறுவதற்காக வங்கிகளில் நீண்ட வரிசையில் காத்திருப்பது வேதனையாக உள்ளது.

தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டையில் புயலால் சேதமடைந்த குடிசை-யை சீரமைக்க பணம் இல்லாததால் தனது மகனை ரூ.10 ஆயிரத்திற்கு அடமானம் வைத்த சம்பவம் நடந்துள்ளது. ஆனால் தமிழக அரசு உரிய நிவாரணம் கொடுத்துவிட்டோம் என்று கூறுகிறது. இது தமிழகத்தை ஆட்சி செய்யும் அரசுக்கு அவமானம் இவ்வாறு அவர் கூறினார்.

பேட்டியின்போது தேசிய மீனவர் பேரவை துணைத்தலைவர் குமரவேலு, முன்னாள் செயலாளர் தங்கம்நிறைந்த செல்வன் மற்றும் ஒருங்கிணைப்பாளர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story