பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அச்சு வெல்லம் தயாரிக்கும் பணி மும்முரம் - விலை வீழ்ச்சியால் விவசாயிகள் விரக்தி


பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அச்சு வெல்லம் தயாரிக்கும் பணி மும்முரம் - விலை வீழ்ச்சியால் விவசாயிகள் விரக்தி
x
தினத்தந்தி 30 Dec 2018 4:35 AM IST (Updated: 30 Dec 2018 4:35 AM IST)
t-max-icont-min-icon

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அச்சு வெல்லம் தயாரிக்கும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது. விலை வீழ்ச்சியால், அச்சு வெல்லம் தயாரிக்கும் விவசாயிகள் விரக்தியில் உள்ளனர்.

அய்யம்பேட்டை,

தமிழர்களின் திருநாளான பொங்கல் பண்டிகை, வருகிற 15-ந் தேதி கொண்டாடப்பட உள்ளது. பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கரும்பு, பச்சரிசி, அச்சு வெல்லம் ஆகிய பொருட்களின் தேவை அதிகமாக இருக்கும். இதில் அச்சு வெல்லம், கரும்புச்சாறில் இருந்து தயாரிக்கப்படும் பொருளாகும்.

இது நோய் தீர்க்கும் மருந்தாகவும் பயன்படுத்தப்பட்டு வருகிறது. பொங்கல் பண்டிகை நெருங்கி வருவதை முன்னிட்டு அச்சுவெல்லத்துக்கு கடும் கிராக்கி ஏற்பட்டுள்ளது. இதனால் அய்யம்பேட்டை பகுதியில் கரும்பு விவசாயிகள் அச்சுவெல்லம் தயாரிக்கும் பணியில் இரவு, பகலாக மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

தஞ்சை மாவட்டத்தில் அய்யம்பேட்டை மற்றும் அதை சுற்றி உள்ள வீரமாங்குடி, தேவன்குடி, மணலூர், இலுப்பக்கோரை, கணபதி அக்ரஹாரம், பட்டுக்குடி, மாகாளிபுரம், உள்ளிக்கடை உள்ளிட்ட 30-க்கும் மேற்பட்ட கிராமங்களில் அச்சுவெல்லம் தயார் செய்யப்படுகிறது.

அச்சு வெல்லம் தயாரிக்கும் முறை குறித்து மாகாளிபுரத்தை சேர்ந்த விவசாயி எம்.பழனிசாமி கூறியதாவது:-

அய்யம்பேட்டை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் அச்சு வெல்லம் தயாரிப்பதற்காக “சி.ஓ.-32” என்ற ரக கரும்பினை சாகுபடி செய்து வருகிறோம். டிசம்பர் மாதம் முதல் வாரத்தில் கரும்பு அறுவடை தொடங்கும். இந்த ஆண்டு தண்ணீர் பற்றாக்குறை காரணமாக டிசம்பர் மாத கடைசியில் தான் கரும்பு அறுவடை தொடங்கியது. மார்ச் மாதம் இறுதிவரை கரும்பு அறுவடை நடைபெறும்.

ஒரு ஏக்கர் கரும்பில் இருந்து 160 சிப்பம் (ஒரு சிப்பம்-30 கிலோ) அச்சு வெல்லம் தயாரிக்கலாம். இந்த ஆண்டு பருவமழை சரிவர பெய்யாத காரணத்தால் 120 சிப்பம் வரை மட்டுமே வெல்லம் தயாரிக்க முடிகிறது. பழங்காலத்தில் மாடுகளை பயன்படுத்தி கரும்பில் இருந்து சாற்றைப் பிழிந்து எடுத்து வெல்லம் தயாரித்தனர். ஆனால் தற்போது மோட்டார் மூலம் கரும்பு சாறு எடுத்து வெல்லம் தயார் செய்கிறோம். கரும்பு சாற்றினை நல்ல பக்குவத்துடன் காய்ச்சினால் தான் சுவையான அச்சு வெல்லம் கிடைக்கும்.

ஒரு நாளில் 500 முதல் 1,500 கிலோ அச்சு வெல்லம் தயாரிக்கலாம். அச்சு வெல்லத்தின் நிறத்தை பொறுத்து விலை நிர்ணயம் செய்யப்படுகிறது. இந்த ஆண்டு 30 கிலோ கொண்ட ஒரு சிப்பம் ரூ.950-க்கு விவசாயிகளிடம் இருந்து கொள்முதல் செய்யப்படுகிறது. இந்த விலை கட்டுப்பாடியாகவில்லை. கரும்பு அறுவடை மற்றும் வெல்லம் தயாரிப்பதற்கு ஆகும் செலவுக்கே இந்த விலை சரியாகிவிடும். விலை வீழ்ச்சி அடைந்து இருப்பதால் விரக்தியில் இருக்கிறோம்.

உர விலை, டீசல் விலை, மூலப்பொருட்கள் விலை, கூலியாட்கள் சம்பளம் உள்ளிட்டவை கடந்த காலங்களை விட பலமடங்கு உயர்ந்துவிட்டதால், தற்போதைய கொள்முதல் விலை கட்டுப்படியாகாத நிலையில் உள்ளது. 30 கிலோ கொண்ட ஒரு சிப்பம் வெல்லம் ரூ.1500-க்கு குறையாமல் விற்றல் தான் கரும்பு சாகுபடி செலவு மற்றும் அச்சு வெல்லம் உற்பத்தி செலவை சமாளிக்க முடியும்.

தண்ணீர் பற்றாக்குறை காரணமாக இந்த ஆண்டு கரும்பு மகசூலும் குறைந்து விட்டது. இங்கிருந்து கரூர், திண்டுக்கல், மதுரை, தஞ்சை, திருவாரூர், நாகப்பட்டினம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களுக்கும் அச்சு வெல்லம் அனுப்பப்பட்டு வருகிறது. இங்கு தயாராகும் அச்சுவெல்லத்தின் சுவை நன்றாக இருப்பதால், வியாபாரிகள் பலர் அய்யம்பேட்டை பகுதிக்கு ஆர்வத்துடன் வந்து அச்சுவெல்லத்தை கொள்முதல் செய்கிறார்கள். இவ்வாறு அவர் கூறினார்.


Next Story