உடல் உறுப்பு தானம் குறித்து 7 ஆயிரம் கிலோ மீட்டர் பிரசாரம்: மோட்டார் சைக்கிளில் தஞ்சை வந்த விவசாயிக்கு பாராட்டு


உடல் உறுப்பு தானம் குறித்து 7 ஆயிரம் கிலோ மீட்டர் பிரசாரம்: மோட்டார் சைக்கிளில் தஞ்சை வந்த விவசாயிக்கு பாராட்டு
x
தினத்தந்தி 30 Dec 2018 4:47 AM IST (Updated: 30 Dec 2018 4:47 AM IST)
t-max-icont-min-icon

உடல் உறுப்பு தானம் குறித்து 7 ஆயிரம் கிலோ மீட்டர் தூரம் மோட்டார் சைக்கிளில் பிரசாரம் செய்து தஞ்சை வந்த விவசாயியை டாக்டர்கள் பாராட்டினர்.

தஞ்சாவூர்,

மராட்டிய மாநிலம் புனேயை சேர்ந்தவர் பிரமோத் மஹாஜன்(வயது 67). விவசாயியான இவர், கடந்த 18 ஆண்டுகளுக்கு முன்பு உயிருக்கு போராடிய ராணுவ வீரர் ஒருவருக்கு தனது ஒரு சீறுநீரகத்தை தானம் செய்தார். ஒரு சீறுநீரகத்துடன் வாழ்ந்து வரும் பிரமோத் மஹாஜன் இன்று வரை திடமாகவும், ஆரோக்கியமாகவும் இருந்து வருகிறார். இதனால் மக்களிடையே உடல் உறுப்பு தானத்தை வலியுறுத்தியும், அனைவரும் உடல் உறுப்பு தானம் செய்ய முன்வர வேண்டும் என்பதை ஊக்குவிப்பதற்காகவும் மோட்டார் சைக்கிள் மூலம் இந்தியா முழுவதும் 97 நாட்கள் 33 நகரங்களில் 10 ஆயிரத்து 351 கிலோ மீட்டர் தூரம் பிரசாரம் பயணம் மேற்கொள்ள முடிவு செய்தார்.

அதன்படி அவர், கடந்த அக்டோபர் 21-ந் தேதி புனேயில் தனது பிரசார பயணத்தை தொடங்கினார். மராட்டியம், குஜராத், ராஜஸ்தான், டெல்லி, அரியானா, பஞ்சாப், பீகார், கர்நாடகம், தெலுங்கானா ஆகிய மாநிலங்களில் பிரசாரம் செய்த அவர் தமிழகத்திற்கு வந்தார். தமிழகத்தில் பல்வேறு நகரங்களில் பிரசாரத்தை மேற்கொண்ட பிரமோத் மஹாஜன் நேற்று மாலை தஞ்சை வந்தார்.

பின்னர் அவர், தஞ்சை சிறுநீரக அறிவியல் சங்கம் மற்றும் எஸ்.பி. மருத்துவமனை சார்பில் நடந்த உடல் உறுப்புதான விழிப்புணர்வு விழாவில் பங்கேற்று பேசினார். அவர் பேசும்போது, மனிதனுக்கு மனிதன் உதவி செய்யாமல் மண்ணுக்குள் செல்வதில் எந்த பலனும் இல்லை. விபத்தில் மூளை சாவு ஏற்பட்டவரின் உடல் உறுப்புகளை 9 பேருக்கு தானமாக கொடுக்க முடியும். துரதிர்ஷ்டமாக விபத்தில் மூளைச்சாவு ஏற்பட்டால் எனது உடல் உறுப்புகளை தானமாக பெற்று கொள்ளலாம் என பதிவு செய்து வைக்க இளைஞர்கள் முன்வர வேண்டும். தானம் செய்யாமல் உடல் உறுப்புகள் மண்ணுக்குள் வீணாக போவதையும், எரிந்து சாம்பலாக மாறுவதையும் நான் விரும்பவில்லை என்றார்.

இதுவரை 7 ஆயிரம் கிலோ மீட்டர் தூரம் பிரசார பயணம் மேற்கொண்ட அவருக்கு சிறுநீரக அறிவியல் சங்க துணைத் தலைவர் மோகன்தாஸ் மற்றும் டாக்டர்கள் பொன்னாடை போர்த்தி நினைவு பரிசுகளை வழங்கினர். விழாவில் சிவாஜிராஜா போன்ஸ்லே, டாக்டர்கள் செந்தில்நாயகம், தர்மராஜன், சிவராஜன், விஜய்ஆனந்த் உள்பட பலர் கலந்து கொண்டனர். தொடக்கத்தில் டாக்டர் எஸ்.பாலசுப்பிரமணியன் வரவேற்றார். முடிவில் டாக்டர் மேகநாதன் நன்றி கூறினார்.

இந்த பிரசார பயணம் அடுத்த மாதம்(ஜனவரி) 25-ந் தேதி புனேயில் நிறைவடைகிறது.


Next Story