கடலூர் பஸ்நிலையத்தில் ஓய்வுபெற்ற அரசு ஊழியர் மனைவியிடம் ரூ. 2 லட்சம் நகை அபேஸ்


கடலூர் பஸ்நிலையத்தில் ஓய்வுபெற்ற அரசு ஊழியர் மனைவியிடம் ரூ. 2 லட்சம் நகை அபேஸ்
x
தினத்தந்தி 30 Dec 2018 3:45 AM IST (Updated: 30 Dec 2018 4:58 AM IST)
t-max-icont-min-icon

கடலூர் பஸ்நிலையத்தில் ஓய்வுபெற்ற அரசு ஊழியர் மனைவியிடம் ரூ.2 லட்சம் நகைகளை அபேஸ் செய்த மர்ம மனிதனை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.

கடலூர்,

கடலூர் கூத்தப்பாக்கத்தை சேர்ந்தவர் சுந்தரமூர்த்தி(வயது 72). நெடுஞ்சாலை துறையில் ஊழியராக பணியாற்றி ஓய்வு பெற்றவர் ஆவார். இவர் புதுச்சேரி லாஸ்பேட்டையில் வசித்து வரும் தனது மகளை பார்த்து வருவதற்காக அவருடைய மனைவி வசந்தா(70) என்பவருடன் கடலூர் பஸ்நிலையத்துக்கு வந்தார். பின்னர் அங்கிருந்து கணவன், மனைவி இருவரும் தனியார் பஸ்சில் புதுச்சேரி லாஸ்பேட்டையில் உள்ள மகள் வீட்டுக்கு சென்றனர். அப்போது வசந்தா தனது கையில் இருந்த பையை பார்த்தபோது பை திறந்த நிலையில் காணப்பட்டது. அதில் இருந்த 7 பவுன் சங்கிலி, 3 பவுன் நெக்லஸ் ஆகியவற்றை காணாமல் அதிர்ச்சி அடைந்தார். இதன் மதிப்பு ரூ.2 லட்சம் என கூறப்படுகிறது.

சுந்தரமூர்த்தியும், அவரது மனைவியும் கடலூர் பஸ்நிலையத்தில் இருந்து பஸ் ஏறியபோது கூட்ட நெரிசலை பயன்படுத்தி மர்ம மனிதன் வசந்தாவின் பையில் இருந்த நகைகளை அபேஸ் செய்து சென்று இருக்கலாம் என கூறப்படுகிறது.

இது குறித்து திருப்பாதிரிப்புலியூர் போலீஸ் நிலையத்தில் சுந்தரமூர்த்தி புகார் கொடுத்தார். அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து நகைகளை அபேஸ் செய்த மர்ம மனிதனை வலைவீசி தேடி வருகிறார்கள். மேலும் பஸ்நிலையத்தில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளையும் வைத்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

கடலூர் பஸ்நிலையத்தில் தற்போது வழக்கத்தை விட பயணிகள் கூட்டம் அதிகரித்து வருகிறது. இதனால் கூட்ட நெரிசலை பயன்படுத்தி மர்ம மனிதர்கள் சிலர் பயணிகளிடம் பணம் மற்றும் அவர்களின் உடமைகளை திருடி சென்று விடுகிறார்கள். பாதிக்கப்படுபவர்களில் ஒருசிலர் மட்டுமே புகார் கொடுக்கிறார்கள். அதேபோல் இரவு நேரங்களில் நடைபாதைகளில் அமர்ந்து சிலர் மது அருந்தி போதையில் தள்ளாடுவது பயணிகளுக்கு அச்சுறுத்தலாக இருக்கிறது. எனவே பஸ்நிலையத்தில் கூடுதலா போலீசாரை பணியமர்த்தி பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என பஸ் பயணிகள் தெரிவித்தனர்.

Next Story