பொள்ளாச்சி சரகத்தில் வாகன விபத்துகளில் 157 பேர் உயிரிழப்பு
பொள்ளாச்சி சரகத்தில் வாகன விபத்துகளில் 157 பேர் உயிரிழந்து உள்ளனர். எனவே வாகன ஓட்டிகள் சாலை விதிகளை கடைபிடிக்க வேண்டும் என்று போலீஸ் துணை சூப்பிரண்டு கிருஷ்ணமூர்த்தி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
பொள்ளாச்சி,
வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் இடையே சாலை விதிகள் குறித்த போதிய விழிப்புணர்வு இல்லாதது மற்றும் வாகன பெருக்கத்தால் பெரும்பாலான விபத்துகள் நடைபெறுகின்றன. இதனால் காயம் மற்றும் உயிரிழப்புகள் ஏற்படுகின்றன. இதுகுறித்து போலீஸ் துணை சூப்பிரண்டு கிருஷ்ணமூர்த்தி கூறியதாவது:-
பொள்ளாச்சி சரகத்திற்கு உட்பட்ட பொள்ளாச்சி நகர கிழக்கு, மேற்கு, வடக்கிபாளையம், கோமங்கலம், நெகமம், மகாலிங்கபுரம், தாலுகா பகுதிகளில் கடந்த ஜனவரி மாதம் முதல் இதுவரை 307 விபத்துக்கள் நடைபெற்று உள்ளன. இதில் 149 பேரும் காயமடைந்து உள்ளனர். 157 பேர் உயிரிழந்து உள்ளனர். பெரும்பாலான விபத்துகள் வளைவான சாலைகள், மரக்கிளைகள் சாலைகளை மறைப்பது, மேடு, பள்ளங்களால் விபத்து கள் நடைபெறுகின்றன. இதை தடுக்க நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி, மரக்கிளைகளை அகற்றியும், ஆங்காங்கே அறிவிப்பு பலகைகள் வைக்கப்பட்டு வருகின்றது.
டிரைவர்களின் கவனக்குறைவு, குடிபோதையில் மற்றும் அதிவேகமாக வாகனங்களை ஓட்டுவதால் ஏற்படும் விபத்துகளை கட்டுப்படுத்த வட்டார போக்குவரத்து அதிகாரிகளுடன் இணைந்து தனியார் பஸ் உரிமையாளர்களுடன் ஆலோசனை கூட்டம் நடத்தி பஸ்களின் வேகத்தை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. லாரி டிரைவர்கள் 24 மணி நேரமும் லாரியை ஓட்டுகின்றனர். இதனால் மனசோர்வு, தூக்கமின்மையால் நெடுஞ்சாலைகளில் விபத்து ஏற்படுகின்றது.
இதற்கு டிரைவர்கள் தூங்காமல் தொடர்ந்து வாகனம் ஓட்ட கூடாது. சிறிது தூரம் சென்றதும் ஓய்வெடுக்க வேண்டும் என்பது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகின்றது. பள்ளி, கல்லூரிகளில் படிக்கும் மாணவர்களிடம் அதிக குதிரை திறன் கொண்ட மோட்டார் சைக்கிளை பெற்றோர்கள் வாங்கி கொடுக்கின்றனர். அந்த வாகனங்களில் மாணவர்கள் வேகமாக செல்வதால் விபத்து ஏற்படுகின்றது.
இதுபோன்ற விபத்துகளை தடுக்க கல்லூரி மாணவர்கள், பெற்றோர்களை வைத்து சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு கூட்டம் நடத்தப்படுகின்றது. பெற்றோர்களும் மாணவர்களை கார், மோட்டார் சைக்கிள் உள்ளிட்ட வாகனங்களை இயக்க அனுமதிக்க கூடாது.இருசக்கர வாகனத்தை ஓட்டும் போது கண்டிப்பாக ஹெல்மெட் அணிய வேண்டும்.
தாறுமாறாக, அதிவேகமாக, குடிபோதையில் மற்றும் செல்போன் பேசிக் கொண்டு வாகனம் ஓட்ட கூடாது.
போக்குவரத்து சிக்னல்களை மதித்து செல்ல வேண்டும். வாகனங்களில் அதிக ஒலி எழுப்ப கூடிய ஏர்ஹாரன்களை பயன்படுத்த கூடாது. போக்குவரத்து விதிமுறை மீறுவோரின் ஓட்டுனர் உரிமத்தை தற்காலிகமாக ரத்து செய்ய நடவடிக்கை எடுக்கப்படும். விபத்துகளை குறைக்க போலீசார் எடுக்கும் நடவடிக்கைக்கு வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் முழுஒத்துழைப்பு கொடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story