பூதலூர் அருகே சமையல் செய்தபோது தீப்பிடித்ததில் பெண் சாவு - காப்பாற்ற சென்ற கணவரும் பலியான பரிதாபம்


பூதலூர் அருகே சமையல் செய்தபோது தீப்பிடித்ததில் பெண் சாவு - காப்பாற்ற சென்ற கணவரும் பலியான பரிதாபம்
x

பூதலூர் அருகே சமையல் செய்தபோது தீப்பிடித்ததில் பெண் இறந்தார். அவரை காப்பாற்ற சென்ற அவரது கணவரும் பரிதாபமாக பலியானார்.

திருக்காட்டுப்பள்ளி,

தஞ்சை மாவட்டம் பூதலூர் ரெயில் நிலையம் அருகே உள்ள முருகன் காலனி பகுதியை சேர்ந்தவர் ரமேஷ்குமார்(வயது 48). இவர் திருச்சியில் உள்ள தனியார் தொழிற்சாலை ஒன்றில் பணியாற்றி வந்தார். இவருடைய மனைவி சோபனா(40). இவர்களுக்கு ஒரு மகனும், மகளும் உள்ளனர்.

கடந்த 17-ந் தேதி சோபனா, வீட்டில் சமையல் செய்து கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக சோபனாவின் சேலையில் தீப்பிடித்தது. இந்த தீ மளமளவென உடல் முழுவதும் பரவியதில் சோபனா அலறி துடித்தார். அவரது அலறல் சத்தம் கேட்டு ஓடி வந்த ரமேஷ்குமார் தனது மனைவியின் உடலில் தீப்பற்றி எரிவதைக்கண்டு அதிர்ச்சி அடைந்தார். பின்னர் சுதாரித்துக்கொண்ட அவர் உடனடியாக மனைவியை காப்பாற்ற முயன்றார். இதில் ரமேஷ்குமாரின் மீதும் தீப்பிடித்தது.

இதனால் 2 பேரும் உடல் கருகி ஆபத்தான நிலையில் இருந்தனர். அவர்களை அக்கம், பக்கத்தினர் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு இருவருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.

பின்னர் இருவரையும் திருச்சியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். பின்னர் அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக இருவரும் திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி கணவனும், மனைவியும் நேற்று அதிகாலை அடுத்தடுத்து பரிதாபமாக இறந்தனர். இதுகுறித்து சோபனாவின் சகோதரர் வெங்கடேசன் பூதலூர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் பூதலூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சித்ரா மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

தீயில் கருகி கணனும், மனைவியும் அடுத்தடுத்து பலியான சம்பவம் பூதலூர் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.


Next Story