அகமத்நகர் மேயர் தேர்தல் விவகாரம் : காங்கிரஸ் - தேசியவாத காங்கிரஸ் கூட்டணியில் சலசலப்பு


அகமத்நகர் மேயர் தேர்தல் விவகாரம் : காங்கிரஸ் - தேசியவாத காங்கிரஸ் கூட்டணியில் சலசலப்பு
x
தினத்தந்தி 30 Dec 2018 5:41 AM IST (Updated: 30 Dec 2018 5:41 AM IST)
t-max-icont-min-icon

அகமத்நகர் மேயர் தேர்தல் விவகாரம், காங்கிரஸ் - தேசியவாத காங்கிரஸ் கூட்டணியில் சலசலப்பை உண்டாக்கியுள்ளது.

மும்பை,

அகமத்நகர் மாநகராட்சி தேர்தலில் எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை. 68 வார்டுகள் கொண்ட அந்த மாநகராட்சியில் 24 வார்டுகளை சிவசேனா கைப்பற்றி தனிப்பெரும் கட்சியாக தேர்வானது. ஆனால் வெறும் 14 வார்டுகளை மட்டுமே கைப்பற்றிய பா.ஜனதா நேற்று முன்தினம் நடந்த மேயர் தேர்தலில் தேசியவாத காங்கிரஸ் கவுன்சிலர்களின் ஆதரவுடன் பதவியை கைப்பற்றியது.

அக்கட்சியை சேர்ந்த பாபாசாகேப் வால்கே மேயராக தேர்வானார். இதன் காரணமாக கூட்டணியில் அங்கம் வகிக்கும் சிவசேனா கட்சி கடும் அதிருப்திக்குள்ளாகி இருக்கிறது.

கட்சி மேலிடத்தின் உத்தரவை மீறி கவுன்சிலர்கள் பா.ஜனதாவுக்கு ஆதரவளித்துள்ளதாக தேசியவாத காங்கிரஸ் விளக்கம் அளித்துள்ளது.

இருப்பினும் வரும் நாடாளுமன்ற தேர்தலில் கூட்டணியாக போட்டியிடப்போவதாக அறிவித்து, தொகுதி பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை நடத்திவரும் நிலையில் இந்த மேயர் தேர்தல் விவகாரம் காங்கிரஸ்- தேசியவாத காங்கிரஸ் இடையே சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

கட்சியின் மாநில தலைவர் அசோக் சவான் வெளிநாடு சென்றுள்ள நிலையில், காங்கிரஸ் வட்டாரங்கள் இதுகுறித்து கூறுகையில், “ கட்சி மேலிடத்தின் ஒப்புதல் பேரிலேயே அகமத்நகர் மேயர் தேர்தலில் தேசியவாத காங்கிரஸ் கவுன்சிலர்கள் பா.ஜனதாவுக்கு ஆதரவாக செயல்பட்டதாக புகார்கள் எழுந்துள்ளன.

அகமத்நகர் உள்ளூர் தலைவர் மீது கட்சி மேலிடம் கடுமையான நடவடிக்கை எடுக்காவிட்டால் அவர்களின் நம்பகத்தன்மை கேள்விக்குரியதாகிவிடும். அதுமட்டும் இல்லாமல் அகமத்நகர் மேயர் தேர்தல் குளறுபடிகள் மாநில அளவிலும் நடைபெற வாய்ப்பு உள்ளது.

கட்சி தலைவர் அசோக் சவான் நாடு திரும்பியதும் இதுகுறித்து பேசி முடிவு எடுக்கப்படும்” என தெரிகிறது.

இது குறித்து தேசியவாத காங்கிரஸ் தலைவர் ஜெயந்த் பாட்டீல் கூறியதாவது:-

அகமத்நகர் உள்ளூர் தலைவர்களின் முடிவை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது. நாங்கள் கட்சியின் உத்தரவை மீறி நடந்துகொண்ட கவுன்சிலர்களுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளோம். அவர்கள் விளக்கம் அளித்ததும் நடவடிக்கை குறித்து அறிவிக்கப்படும். தேசியவாத காங்கிரஸ் கட்சியின் கொள்கையில் குழப்பத்தை ஏற்படுத்த நினைக்கும் பா.ஜனதாவின் முயற்சி ஒருபோதும் வெற்றி பெறாது.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story