உஷாரய்யா உஷாரு..


உஷாரய்யா உஷாரு..
x
தினத்தந்தி 30 Dec 2018 6:50 AM GMT (Updated: 30 Dec 2018 6:50 AM GMT)

அவருக்கு இரண்டு மகள்கள். மூத்த மகள் நாட்டியத்தில் தேர்ச்சி பெற்றிருந்தாள். படிப்பிலும் சிறந்து விளங்கினாள். கல்லூரியில் படிக்கும் காலத்திலே, வீட்டில் சிறுமிகளுக்கு நாட்டியம் கற்றுக்கொடுக்கத் தொடங்கினாள்.

வருக்கு இரண்டு மகள்கள். மூத்த மகள் நாட்டியத்தில் தேர்ச்சி பெற்றிருந்தாள். படிப்பிலும் சிறந்து விளங்கினாள். கல்லூரியில் படிக்கும் காலத்திலே, வீட்டில் சிறுமிகளுக்கு நாட்டியம் கற்றுக்கொடுக்கத் தொடங்கினாள். அதில் ஓரளவு வருமானமும் வந்து கொண்டிருந்தது. அவளுக்கு திருமணத்தில் ஆர்வமே இல்லாமல் இருந்தது. வயது முப்பதை கடந்த நிலையில் உறவுக்கார இளைஞர் ஒருவருக்கு அவளை திருமணம் செய்து வைத்தார்கள். ஆனால் அவளுக்கு மணவாழ்க்கை ஏனோ பிடிக்கவில்லை.

திருமணமான பத்தே நாட்களில் தாய்வீட்டிற்கு திரும்பி வந்துவிட்டாள். காரணம் கேட்டபோது ‘குடும்ப வாழ்க்கை வாழப்பிடிக்கவில்லை’ என்று ஒரே வார்த்தையில் கூறிவிட்டு, நாட்டியத்திலே மூழ்கிவிட்டாள். அதுவே அவளது வாழ்க்கையாகிப்போனது.

இரண்டாவது மகள் தனியார் நிறுவனம் ஒன்றில் பொறுப்புமிக்க பணியில் இருக்கிறாள். அவளுக்கு மிக கவனமாக வரன் தேடினார்கள். அவள் மணவாழ்க்கையானது சிறப்பாக அமைய வேண்டும் என்ற அக்கறை, பெற்றோருக்கு மிக அதிகமாக இருந்தது. அவளுக்கு அரசு பள்ளி ஒன்றில் ஆசிரியராக பணியாற்றிக்கொண்டிருக்கும் ஒருவரை வரனாக தேர்ந்தெடுத்தார்கள். அவர் பெற்றோருக்கு ஒரே மகன். பெற்றோருக்கு திருமணமாகி 20 வருடங்கள் கழித்து பிறந்தவர்.

அவரது குணாதிசயத்தை பற்றி ஊரில் பலரிடம் விசாரித்தார்கள். கருத்து சொன்ன அனைவருமே அவரை மிக நல்லவர் என்றார்கள். ‘பயபக்தி கொண்டவர்.. அமைதியானவர்.. தான் உண்டு தன் வேலை உண்டு என்று வீட்டிலே இருப்பார்.. யாரிடமும் அதிர்ந்து கூட பேசமாட்டார்.. பெண்களை பார்த்தாலே ஒதுங்கிப்போய் விடுவார்..’ என்றெல்லாம் புகழ்ந்து சொன்னார்கள்.

அதை கேட்டு பெண் வீட்டார் மிகுந்த மகிழ்ச்சியடைந்தார்கள். பெண்ணை பார்க்க வரும்படி அழைத்தார்கள். பெற்றோரும், அவரும் பெண்பார்க்க சென்றார்கள். அவரது பெற்றோர் முதுமையுடன் காட்சி அளித்தார்கள். வரனும் 35 வயதைத் தொட்டிருந்தார். ஆனாலும் எல்லோருமே அவர் மிக நல்லவர் என்று கூறியதால், அவருக்கே பெண்ணை மண முடித்து கொடுத்தார்கள்.

அவளும் மகிழ்ச்சியாக மணவாழ்க்கைக்குள் அடியெடுத்து வைத்தாள். ஆனால் திருமணமாகி மாதங்கள் சில கடந்த பின்பும் அவள் முகத்தில் மகிழ்ச்சியே ஏற்படவில்லை என்பதை, அவளது மூத்த சகோதரியான நடனக்கலைஞர் கண்டுபிடித்துவிட்டாள். தொடர்ந்து அவள் தங்கையை கண்காணித்தாள். அவள் ஒப்புக்கு மற்றவர்கள் முன்னால் மகிழ்ச்சியாக இருப்பதுபோல் காட்டிக்கொள்வதையும், பொது இடங்களில் மட்டும் கணவரோடு சகஜமாக இருப்பதுபோல் தோன்றுவதையும் அவள் தெரிந்துகொண்டாள்.

திருமணமாகி ஆறு மாதங்கள் கடந்தும் தங்கையிடம் எந்த மலர்ச்சியையும் காணாத அக்காள், வெளியூர் நடன நிகழ்ச்சி ஒன்றுக்கு சென்றபோது தங்கையை தனக்கு துணையாக அழைத்துச் செல்வதுபோல் கூட்டிச் சென்றாள். அங்கு வைத்து ‘நீ மகிழ்ச்சியாக வாழவில்லை என்பது எனக்குத் தெரியும். உன் மண வாழ்க்கையில் என்ன நடக்கிறது என்பதை மறைக்காமல் சொல்’ என்றாள்.

முதலில் சந்தோஷமாக இருப்பதாக ஏதேதோ கூறி சமாளித்த தங்கை, ஒரு கட்டத்தில் தன்னை மறந்து அழுத படி உண்மையை சொல்லி இருக் கிறாள்.

‘நீ வாழாவெட்டியாக வந்து தாய் வீட்டில் இருப்பதுபோல் நானும் வந்து உட்கார்ந்துவிடக்கூடாது என்பதற்காகத்தான், உடல் - மன ஆசைகளை எல்லாம் ஒதுக்கித்தள்ளிவிட்டு அவரோடு இருந்துகொண்டிருக்கிறேன். அவர் வித்தியாசமான பிறவி. அவர் மீது என் கை பட்டாலே எழுந்துபோய் குளித்துவிட்டு, ஏதோ விசேஷ மந்திரங்களை எல்லாம் சொல்லி ஜெபிக் கிறார். பலவிதமான விரதங்களின் பெயரைக் கூறி மாதத்தில் 15 நாட் களுக்கு மேல் பெண்களைப்போல் விரதம் இருக்கிறார். வெளியே எங்கேயும் வரமாட்டார். யாரிடமும் பேச மாட்டார். ஏதோ கனவு கண்டதாகக் கூறி, பக்கத்து மாநிலத்தில் உள்ள கோவில் ஒன்றை குறிப்பிட்டு அங்குபோய் மீண்டும் ஒருமுறை திருமணம் செய்துகொள்ள வேண்டும் என்று கட்டாயப் படுத்துகிறார். டெலிவிஷன் காட்சிகளில் பெண்களை பார்த்தால்கூட எழுந்துபோய் கை, கால், முகத்தை கழுவுகிறார். நான் கட்டாயப்படுத்தி அனுப்பி வைத்தால்தான் பள்ளிக்கே போகிறார்’ என்றெல்லாம் கூறி, தான் இன்னும் கன்னியாகவே இருப்பதையும் உணர்த் தினாள்.

அதனால் கலங்கிப்போன நடனப் பெண், தங்கையின் மாமியாரிடம் போய் விளக்கம் கேட்டபோது, ‘அவன் எங்களுக்கு காலங் கடந்து பிறந்தவன். வீட்டிற்கு ஒரே பிள்ளை. அதனால்தான் அப்படி பயந்த சுபாவத் துடன் இருக்கிறான். உன் தங்கையால் அவனை ஆண் மாதிரி செயல்பட வைக்க முடியும். முயற்சி செய்து ஆசைகாட்டச் சொல். சரியாகிவிடுவான். சீக்கிரம் அவளை தாயாகச் சொல். எல்லா பிரச் சினைகளும் தீர்ந்துவிடும்’ என்றிருக்கிறார்.

தன்னைப்போல் தங்கையும் வாழா வெட்டியாகிவிடக்கூடாது என்று கருதிய அக்காள் தங்கையையும் அழைத்துக்கொண்டு போய், தனது தோழியான வக்கீ லிடம் இத்தனையையும் சொல்லி ஆலோசனை கேட்டிருக்கிறாள்!

எல்லோருக்கும் நல்லபிள்ளைபோல் நடந்துகொள்ளும் பரம சாது ஆண்கள்கூட, மணவாழ்க்கைக்கு தகுதியில்லாதவர்களாக இருக்கிறார்கள் என்பதை சுட்டிக்காட்டத்தான் இந்த சம்பவம். யாரையும் கண்ணை மூடிக்கிட்டு நம்பிடாதீங்க!

-உஷாரு வரும்.

Next Story