மனுநீதி நாள் முகாமில் 496 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் கலெக்டர் கந்தசாமி வழங்கினார்
மாங்கால் கிராமத்தில் நடந்த மனுநீதி நாள் முகாமில் 496 பயனாளிகளுக்கு ரூ.69 லட்சத்து 70 ஆயிரம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை கலெக்டர் கந்தசாமி வழங்கினார்.
செய்யாறு,
வெம்பாக்கம் தாலுகா மாங்கால் கிராமத்தில் மனுநீதி நாள் முகாம் நடந்தது. தூசி கே.மோகன் எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார். கூட்டுறவு சங்க இணைப்பதிவாளர் ரேணுகாம்பாள், சமூக பாதுகாப்பு தனி துணை ஆட்சியர் உமாமகேஸ்வரி, செய்யாறு உதவி கலெக்டர் அன்னம்மாள் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
சிறப்பு விருந்தினராக கலெக்டர் கே.எஸ்.கந்தசாமி கலந்து கொண்டு 496 பயனாளிகளுக்கு ரூ.69 லட்சத்து 70 ஆயிரம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கி பேசியதாவது:–
விவசாயத்தை பிரதான தொழிலாக கொண்டுள்ள மாவட்டமாக திருவண்ணாமலை திகழ்கிறது. அரசின் பல்வேறு திட்டங்களை பொதுமக்கள் அறிந்திடவும், பொதுமக்களின் கோரிக்கையை அரசின் கவனத்திற்கு கொண்டு செல்லவும் மனுநீதிநாள் முகாம் நடத்தப்படுகிறது. அதன்படி பொதுமக்களிடம் பெற்ற கோரிக்கை மனுவில் தகுதியுடைய பயனாளிகளுக்கு அரசின் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளது.
இன்றைய சூழ்நிலையில் கல்விதான் மிகவும் முக்கியமானதாகும். ஆண், பெண் என்ற வேறுபாடின்றி சமமாக கல்வி அறிவு படிக்க வேண்டும். மாவட்டத்தில் பெண் குழந்தைகளில் சதவீதம் ஆண் குழந்தைகள் விட குறைவாக உள்ளது. 1000 ஆண் குழந்தைகளுக்கு 883 பெண் குழந்தைகள் என்ற நிலை உள்ளது. கடந்த ஆண்டு 96 சதவீதமாக இருந்த பெண் குழந்தை எண்ணிக்கை இந்தாண்டு 88 சதவீதமாக குறைந்துள்ளது. ஆண்–பெண் இருவரையும் சமமாக பார்க்க வேண்டும், அப்போது தான் நாடு வளர்ச்சியும், முன்னேற்றமும் அடையும்.
இவ்வாறு அவர் பேசினார்.
நிகழ்ச்சியில் துணை தாசில்தார் துளசிராமன், வருவாய் ஆய்வாளர் கீர்த்திராஜ், வட்டார மருத்துவ அலுவலர் பத்மபிரியா உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் வெம்பாக்கம் தாசில்தார் சுப்பிரமணி நன்றி கூறினார்.