வாலிபர் கொலை வழக்கில் துணை போலீஸ் சூப்பிரண்டுகள் தலைமையில் 5 தனிப்படை அமைப்பு


வாலிபர் கொலை வழக்கில் துணை போலீஸ் சூப்பிரண்டுகள் தலைமையில் 5 தனிப்படை அமைப்பு
x
தினத்தந்தி 31 Dec 2018 3:45 AM IST (Updated: 30 Dec 2018 9:14 PM IST)
t-max-icont-min-icon

திருவண்ணாமலையில் வாலிபர் கொலை வழக்கில் குற்றவாளிகளை பிடிக்க 2 துணை போலீஸ் சூப்பிரண்டுகள் தலைமையில் 5 தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.

திருவண்ணாமலை, 

சென்னை நெசப்பாக்கம் பாரதிநகரை சேர்ந்தவர் நாகராஜ் (வயது 28). இவர் சென்னையில் உள்ள ஒரு பிரபல கட்டுமான நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். இவரது சொந்த ஊர் திருவண்ணாமலை. அதே பகுதியை சேர்ந்தவர் கார்த்திகேயன் (வயது 38). பெரிய நிறுவனங்களுக்கு உள்அலங்காரம் செய்யும் தொழில் செய்து வருகிறார். இவரது மனைவி மஞ்சுளா (36). இவர்களது மகன் ரித்தேஷ்சாய் (10).

நாகராஜிக்கும், மஞ்சுளாவிற்கும் கள்ளக்காதல் ஏற்பட்டது. இவர்கள் இருவரும் உல்லாசமாக இருக்கும் போது ஒரு நாள் ரித்தேஷ் அதனை பார்த்து அவரது தந்தையிடம் கூறியுள்ளான். இதனால் கள்ளகாதலுக்கு தடை ஏற்பட்டது. ஆத்திரம் அடைந்த நாகராஜ் ரித்தேஷை கடத்தி கொலை செய்தார். இதுகுறித்து போலீசார் நாகராஜை கைது செய்து சென்னை புழல்சிறையில் அடைத்தனர். நாகராஜ் சமீபத்தில் ஜாமீனில் வெளியே வந்தார்.

சென்னையில் இருந்தால் உயிருக்கு ஆபத்து ஏற்படும் என்று கருதிய அவர் திருவண்ணாமலைக்கு வந்தார். 4 நாட்களுக்கு முன்பு அவர் திருவண்ணாமலை அய்யங்குளத் தெருவில் உள்ள ஒரு செல்போன் ரீசார்ஜ் கடையில் வேலைக்கு சேர்ந்தார்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் நாகராஜை 5 பேர் கொண்ட மர்ம கும்பல் வெட்டி சாய்த்தனர். இதில் படுகாயம் அடைந்த அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து திருவண்ணாமலை டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் குற்றவாளிகளை பிடிக்க திருவண்ணாமலை துணை போலீஸ் சூப்பிரண்டு அண்ணாதுரை, செய்யாறு துணை போலீஸ் சூப்பிரண்டு குணசேகரன் ஆகியோர் தலைமையில் 5 தனிப்படை அமைக்கப்பட்டு உள்ளது. தனிப்படை போலீசார் கொலை தொடர்பாக திருவண்ணாமலையில் சந்தேகத்திற்கு இடமளிக்கும் வகையில் சுற்றி திரிந்த 4 பேரை பிடித்த விசாரணை நடத்தி வருவதாக கூறப்படுகிறது.

மேலும் இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்த தனிப்படை போலீசார் சென்னைக்கு விரைந்து உள்ளனர். சிறுவன் கொலை வழக்கிற்கும், இந்த கொலைக்கும் ஏதேனும் தொடர்பு உள்ளதா? என்று போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story