தர்மபுரியில் தாய்–மகள் மர்ம சாவு: காதலன் குடும்பத்தினர் 6 பேர் மீது வழக்கு
தர்மபுரியை அடுத்த புழுதிகரையில் தாய்–மகள் மர்மமான முறையில் இறந்தது தொடர்பாக காதலன் குடும்பத்தினர் 6 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
தர்மபுரி,
தர்மபுரியை அடுத்த கிருஷ்ணாபுரம் புழுதிகரையை சேர்ந்தவர் பழனி, கிரேன் ஆபரேட்டர். இவரது மனைவி மகேஸ்வரி (வயது 37). இவர்களுக்கு 2 மகள்களும், ஒரு மகனும் இருந்தனர். இதில் மூத்த மகள் திவ்யாலட்சுமி (17). அந்த பகுதியில் உள்ள மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்–1 வகுப்பு படித்து வந்தார். பழனி வேலை விஷயமாக வெளியூர் சென்றதாக கூறப்படுகிறது. மற்ற 2 குழந்தைகளும் அருகில் உள்ள தாத்தா வீட்டிற்கு சென்று இருந்தனர்.
இந்த நிலையில் சம்பவத்தன்று திவ்யாலட்சுமி தீக்காயங்களுடன் உடல் கருகிய நிலையில் இறந்து கிடந்தார். அவரது அருகே மகேஸ்வரி தூக்கில் தொங்கிய நிலையில் பிணமாக கிடந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த கிருஷ்ணாபுரம் போலீசார் விரைந்து வந்து தாய், மகள் இருவரது உடல்களையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தர்மபுரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் தொடர்பாக கிருஷ்ணாபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.
இந்த விசாரணையில் திவ்யாலட்சுமிக்கும், திப்பம்பட்டி நாகசமுத்திரம் பகுதியை சேர்ந்த பொக்லைன் ஆபரேட்டர் பிரகாசம் (22) என்பவருக்கும் இடையே காதல் இருந்து வந்ததும், இந்த காதலுக்கு இருதரப்பு பெற்றோரும் எதிர்ப்பு தெரிவித்ததும் தெரிய வந்தது. சம்பவத்தன்று காலை மகேஸ்வரியும், திவ்யாலட்சுமியும் தங்களது வீட்டு வாசலில் அமர்ந்து இந்த காதல் விவகாரம் தொடர்பாக பேசிக் கொண்டிருந்த போது, அவர்களுக்கு இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
இதனை தொடர்ந்து அவர்கள் வீட்டிற்குள் சென்றும் சண்டை போட்டதாக கூறப்படுகிறது. அப்போது மகேஸ்வரி ஆத்திரம் அடைந்து தனது மகளுக்கு தீவைத்து எரித்து கொன்று விட்டு தானும் தூக்குப்போட்டு தற்கொலை செய்திருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கின்றனர். இதனிடையே தாய், மகள் மர்மமான முறையில் இறந்தது தொடர்பாக பொக்லைன் ஆபரேட்டர் பிரகாசம், அவரது குடும்பத்தினர் கண்ணன், சத்யா, இன்மொழி, முத்துவேல், மாதம்மாள் ஆகிய 6 பேர் மீது தற்கொலைக்கு தூண்டியதாக போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இந்த நிலையில் அந்த 6 பேரும் தலைமறைவாகி விட்டனர். அவர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.